ஸ்தல வரலாறு:
தர்மத்திற்காக குளம் வெட்டிய ஊர் என்பதால் தர்மகுளம் என்றானது. குளம் வெட்டும்போது கிடைத்த விநாயகர் தர்ம விநாயகர் எனும் திருநாமத்தோடு இங்கு கோவில் கொண்டு தரிசனம் தருகின்றார்.
சரபோஜி மன்னனின் மூதாதையர்களுள் ஒருவர் இவ்வாலயம் வந்தபோது, ஆவுடையார் மீது கொள் தான்ய மூட்டையை கட்டி வைத்து விட்டு, சிவபெருமானாக கருதி வழிபடலானார். அந்த தான்ய மூட்டை லிங்க உரு கொண்டு எழுந்தது. தானாக வடிவுற்றதினால் தான்தோன்றீஸ்வரர் எனப் பெயர் கொண்டதாக கூறப்படுகிறது.
200 வருடங்களுக்கு முன்பாக கடல் சீற்றத்தினால் கடலுக்குள் மூழ்கி மறைந்த சங்கமுகேஸ்வரர் கோவில் மூலவரையும் அம்பாளையும், இந்த அக்ரஹாரத்து மக்களின் பெரு முயற்சிகளினால், கடலிலிருந்து மீட்டு இங்கு பிரதிஷ்டை செய்துள்ளனர் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
மேற்கில் லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலும், கிழக்கில் காளியம்மன் கோவிலும், வடக்கில் சித்த பரமேஸ்வரர் கோவிலும் உள்ளன.
சித்த பரமேஸ்வரரின் கோவிலினுள், வாராஹி, பீடபஹாரி, பைரவர் மற்றும் நாகதேவதைகளும் தரிசனம் தருகின்றனர்.
அசுரர்களிடம் பயம் கொண்ட இந்திரன், இத்தலத்து தடாகத்தின் தாமரை மலர்த்தண்டில் ஒளிந்து கொண்டான். அவனைத் தேடி வந்த இந்திராணி இத்தலம் வந்து தவம் மேற்கொள்கிறாள். அவளையும் அவளது தவத்தையும் காக்க, மஹாகாளர் எனும் ருத்ரரின் அம்சமான சித்த பரமேஸ்வரரை இங்கு அனுப்பியதாக ஸ்தல வரலாறு கூறுகிறது.
இந்த அக்ரஹாரத்தைச் சேர்ந்த பிரம்மஸ்ரீ சூரிய தீட்சிதர் என்பவர் வாஜபேயம் போன்ற பல யாகங்களை நடத்தியுள்ளார் என கூறுகின்றனர்.