மூலவர்: ஆட்கொண்டநாதர்் அம்பாள்: சிவபுரந்தேவி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக ஆட்கொண்டநாதர் எழுந்தருளியுள்ளார். வட்ட வடிவ ஆவுடையாரும் அழகிய லிங்க பாணமும் கொண்டு கம்பீரமாகக் காட்சி தருகின்றார். வெள்ளிக் கவசமும் நாகாபரணமும் அழகு சேர்க்கின்றன. இவர் சுயம்பு லிங்கம். இவருக்கு நரசிம்மேஸ்வரர் என்ற திருநாமமும் உண்டு.
முன் மண்டபத்திலிருந்து ஒரே சமயத்தில் ஸ்வாமியையும் விமானத்தையும் ஒருசேர தரிசிக்கலாம்.
தெற்கு பார்த்த தனி சந்நிதியில் அன்னை சிவபுரந்தேவி எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். சந்நிதியைச் சுற்றிலும் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்கள் காணப்படுகின்றன. லலிதா சஹஸ்ரநாம விளக்கங்களைக் காணலாம்.
ஸ்ரீ வித்தக விநாயகர் ஸ்தல விநாயகராக இருந்து ஆசி வழங்குகிறார்.
பைரவரின் அழகிய திருவுருவம் மனதை விட்டு அகலாதது. க்ஷேத்ரபாலகர்களின் பல்வேறு அழகிய வடிவங்களை சந்நிதியைச் சுற்றிலும் காணலாம். கால சம்ஹார மூர்த்தி, திரிபுராந்தகர் ஆகியோரின் சிற்பங்கள் அபூர்வமானவை.
அஷ்டலட்சுமி மண்டபத்துச் சிற்பங்கள் யாவும் சிற்பக்கலைக்கு உதாரணமாக இருக்கின்றன. 27 ஐம்பொன் சிலைகள் அற்புதமான அழகுடன் ஜொலிக்கின்றன. துர்க்கை மண்டபத்து துர்க்கை சிற்பங்களைத் தட்டினால் இசை எழுப்புகின்றன. அஷ்டவசுக்களின் வடிவங்கள் அனைத்தும் பெருமை சேர்ப்பவைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
கற்சுவர்களாலான நிலவறை, கற்சாளரம், கற்குழாய்கள் அனைத்தும் வேறு எங்கும் கண்டிராத அளவுக்கு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன.