இத்தலத்தில் சிவபூஜை செய்து கொண்டிருந்த மார்க்கண்டேய முனிவர், அபிஷேகம் செய்ய பசும்பால் கிடைக்கவில்லையே என வருந்தினார். லிங்கத்திலிருந்தே பால் பெருகும்படி சிவபெருமான் அனுக்ரஹம் செய்தார். இதனால் இத்தலம் பாற்றுறை என அழைக்கப்படுகின்றது.
வேட்டைக்கு சென்று கொண்டிருந்த சோழ அரசன், வெள்ளைப் பறவை ஒன்று புதரிலிருந்து வெளிப்பட்டு செல்வதைக் கண்டான். ஆர்வ மிகுதியில் புதரை தோண்டிப் பார்த்ததில் லிங்கம் ஒன்று புதையுண்டிருப்பது தெரிய வந்தது. தோண்டும் போது மண்வெட்டி பட்டதில் பால் பெருகியது. அந்த சிவலிங்கத்தை அரசன் வெளிக்கொணர்ந்து பிரதிஷ்டை செய்து ஆலயம் எழுப்பியதாக வரலாறு.