இத்தலம் சீர்காழியைப் போல பன்னிரு நாமங்களைக் கொண்டுள்ளது. மூர்த்தி, தீர்த்த விசேஷங்களுடன் கூடிய புண்ணிய ஸ்தலம்.
ஆதியில் ஒரு சக்கரமுள்ள ரதமும் ஒரு குதிரையும் கொடுக்கப்பட்டதால், ரதத்தை சரிவர செலுத்த முடியாமல் கஷ்டப்பட்ட சூரிய பகவான், பூலோகம் வந்து மணிமுத்தா நதிக்கரையிலுள்ள பாரிஜாத வனத்தில் தனது பெயரால் ஒரு தீர்த்தம் உண்டு பண்ணினார். நீல ரத்னத்தால் சிவலிங்கம் ஒன்றை ஸ்தாபித்து பூஜித்தார். தான் உண்டு பண்ணிய தீர்த்தத்தால் ஸ்வாமியையும் அம்பாளையும் அபிஷேகித்து வழிபட்டார். சிவபெருமானின் திருவருளைப் பெற்று, தாம் விரும்பிய வரங்களைப் பெற்று, ரதத்தை தடை இன்றி செலுத்தும் தகுதியும், நவகிரகங்களுக்கு தலைமை வகிக்கும் பொறுப்பையும் பெற்றார்.
நீலரத்னத்தால் லிங்க மூர்த்தம் உருவானதால் இந்த க்ஷேத்ரம் ஆதிரத்னேஸ்வரம் என்றும், மூலவருக்கு ஆதிரத்னேஸ்வரர் என்றும் பெயர் வழங்கலாயிற்று. லிங்கத்திருமேனிக்கு அபிஷேகம் செய்யும்போது பால் நீலநிறமாக மாறுகிறது.
வருணனின் புதல்வனான வாருணி தனது தூதர்களோடு ரத சஞ்சாரம் செய்து கொண்டிருக்கையில், இவ்வனத்திலுள்ள துர்வாச முனிவருடைய ஆஸ்ரமத்தை கடந்து செல்லும்போது முனிவரை பரிகாசம் செய்தும் அவமதித்தும் நடந்து கொண்டதால், சினம் கொண்ட துர்வாசர் 'உன்னுடைய முகம் ஆட்டின் முகமாகவும், சரீரம் யானையைப் போன்றும் இருக்கக் கடவது' என சபித்தார்.
சாபத்திற்கு பயந்த வருண புத்திரன் சாபநிவர்த்தி வேண்டி பிரார்த்தித்தான். 'தவம் மேற்கொண்டிருக்கும் முனிசிரேஷ்டர்களை அவமதித்த தோஷம் போக வேண்டுமானால், சிவ தீர்த்தங்களில் ஸ்நானம் செய்து, சிவ க்ஷேத்ரங்கள் சென்று வழிபட்டு உன் சாபத்தைப் போக்கிக் கொள்' என்று கூறினார் துர்வாசர்.
ஆட்டின் தலையையும் யானையின் உடலையும் பெற்ற வாருணி பல சிவ க்ஷேத்ரங்களுக்கு சென்று வழிபட்டு வந்தான். அகஸ்தியரின் யோசனைப்படி இத்தலத்திற்கு வந்த வாருணி தனது பெயரில் ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி, அதில் தினம் ஸ்நானம் செய்து, ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்வித்து, தட்சிணாமூர்த்தியின் சந்நிதியில் அமர்ந்து பஞ்சாட்சர மந்திரங்களை ஆறு லட்சம் முறை ஜபித்து வழிபட்டு வந்தான். பிரத்யட்சமான சிவபெருமான் அவனுக்கு சாபவிமோசனம் அருளியதாக ஸ்தல வரலாறு.
ஆட்டின் தலையும் யானையின் உடலும் கொண்ட வாருணி பூஜித்த ஸ்தலம் என்பதால், இவ்ஊருக்கு ஆடானை (ஆடு - ஆனை) என்ற பெயர் வந்தது. வடமொழியில் அஜகஜபுரம் என்று கூறுவர். இதன் பொருட்டே ஸ்வாமியை ஆடானைநாதர் என்றும் அஜகஜேஸ்வரர் என்றும் அழைக்கின்றனர்.
திருக்கடவூரில் இறைவனருளால் யமனிடமிருந்து விடுதலை பெற்ற மார்க்கண்டேயர் - பஞ்சாட்சர மந்திர ஜபம் செய்யும் பொருட்டு பல க்ஷேத்ரங்களுக்கு சென்று கொண்டிருந்தார். ஆதிரத்னேஸ்வரம் வந்ததும் புண்ணிய தீர்த்தம் ஒன்றை உருவாக்கி, அதன் மேற்றிசையில் லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து நித்ய பூஜைகளை செய்து வந்தார்.
ஒரு சமயம் வசிஷ்ட முனிவர் வாஜபேய யாகம் செய்யும் பொருட்டு உதவிக்கு காமதேனுவை அழைத்தார். முன்பெல்லாம் நினைத்த மாத்திரத்தில் வரும் காமதேனுப் பசு, இப்போது வரவேயில்லை. தனது சங்கற்பம் வீணானது கண்டு கோபமுற்ற வசிஷ்டர் 'ஆட்டின் வடிவத்தை அடைவாயாக' என சபித்தார். அப்போது அங்கு வந்த நாரதர் 'காமதேனுப் பசு வேத மந்திர ஸ்வரூபமானது. தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் உதவும் அந்த பசுவை சபித்ததினால் உமக்கும் தோஷம் பற்றிக் கொண்டது' என்று கூறினார்.
பூலோகத்திற்கு ஆட்டின் வடிவுடன் வந்த காமதேனுப் பசு இங்குள்ள மணிமுத்தா நதியில் நீராடி, பிரதட்சிணம் செய்து, பாலாபிஷேகம் செய்து வழிபட்டு தனது சாபத்தைப் போக்கிக் கொண்டது. இதனால் இவ்ஊருக்கு கோமுத்தீஸ்வரம் என்ற பெயரும், இறைவனுக்கு கோமுக்தீஸ்வரர் என்ற பெயரும் வழங்கலாயிற்று.
சாப விமோசனம் வேண்டிய பலரும் ஸ்நானம் செய்ததால் மணிமுத்தா நதிக்கு பாவநாச நதி என்ற பெயரும் உண்டு.
வசிஷ்டரும் யாக முடிவில் இங்குள்ள சூரிய புஷ்கரிணியை அடைந்து ஸ்நானம் செய்து, அஜகஜேசரது சந்நிதியில் அமர்ந்து தவம் மேற்கொண்டு தமக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்கிக் கொண்டார்.
பாண்டவர்களுள் ஒருவனான அர்ச்சுணன், சத்ருக்களை ஜெயிப்பதற்கும் பாசுபத அஸ்திரம் பெற வேண்டியும், வெறும் இலைகளை உட்கொண்டு விரதம் அனுஷ்டித்து, கடுந்தவம் மேற்கொண்டான். தவத்தில் மகிழ்ந்த சிவபெருமானும் அவனுக்கு பாசுபத அஸ்திரம் தந்தருளினார் என ஸ்தல வரலாறு.
தேவாரத்திருத்தலம்.