ஸ்தல விருட்சமான உத்தாலம் எனும் மரம் ஒரு வகை ஆத்தி மரம். இவ்வூர் உத்தால வனம் மிகுந்து இருந்ததால் உத்தாலம் எனப் பெயர் கொண்டு நாளடைவில் குத்தாலம் என்று மருவி இருக்கக் கூடும்.
ஆற்றிடைக்குறைத் தலமாதலால் துருத்தி எனப் பெயர் கொண்டது. ஆதி காலத்தில் கோவிலைச் சுற்றிலும் காவேரி ஓடியுள்ளது. திருத்துருத்தி காவிரியின் நடுவே இருந்திருக்கின்றது. தற்போது காவேரி ஆலயத்தின் வடப்புறமாக கிழக்கு நோக்கி ஓடுகிறது.
வேள்விக்குடியில் உமா தேவியாரை திருமணம் செய்யும் முன்பாக சுவாமி இத்தலத்தில் பிரம்மசாரியாக இருந்து வேதம் ஓதி வந்ததாலும், உத்தால மரத்தடியில் மணவாளனாகக் காட்சி தந்ததாலும், சுவாமி உக்தவேதீச்வரர் எனும் திருநாமம் கொண்டார்.
சுவாமி, தம்மை மீண்டும் ஒரு முறை மணக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அம்பாளின் விருப்பத்தை நிறைவேற்றவும், அம்பாளைப் பெண்ணாக வளர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த பரத மாமுனிவரது விருப்பத்தைப் பூர்த்தி செய்யவும், பரத முனிவரின் வேள்விக் குண்டத்தில் அம்பாளை ஒரு பெண்ணாகத் தோன்றச் செய்தார் சிவபெருமான்.
வேள்விக் குண்டத்திலிருந்து வெளித்தோன்றிய பெண், தினமும் காவிரிக்குச் சென்று நதியின் நடுவில் இருந்த மணல்மேட்டில், சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டாள். எட்டாம் நாள், அம்பிகை வருவதற்கு முன்பாகவே சிவபெருமான் அங்கு வந்து, கருங்கல் ஆலயம் அமைத்து, லிங்க வடிவில் எழுந்தருளினார். சுயம்பு வடிவத்தைக் கண்ணுற்ற அம்பிகை மிகவும் மகிழ்ந்து அபிஷேக ஆராதனைகள் செய்தாள் என ஸ்தல வரலாறு.
லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு உத்தால மரத்தடியில் மணவாளனாகக் காட்சி தந்த இறைவன், அம்பாளின் கரம் பற்றியதும், தம்மை உற்றார் உறவினர் சூழ சாஸ்திரப்படி கல்யாணம் செய்து கொள்ளுமாறு கோருகிறாள் அம்பிகை. அவ்வாறே செய்வதாக வாக்களித்தார் இறைவன்.
அம்பிகைக்கு வாக்களித்தபடி தான் சொன்ன விதியைத் தானே அறிந்தமையால் சொன்னவாறறிவார் எனப் பெயர் கொண்டார்.
மணவாளநாதராக வருகை தந்தபோது - மணப் பெண்ணாக, நறுமணம் கமழும் சாந்து மற்றும் வாசனை மலர்கள் கொண்டு தன்னை அலங்கரித்துக் கொண்டு நின்றதால், அம்பிகைக்கு பரிமள சுகந்த நாயகி (அ) நறுஞ்சாந்திளமுலை நாயகி எனப் பெயர் வந்தது.
காசிக்கு பயணம் மேற்கொண்ட உருத்திர சர்மா எனும் அந்தணரை போக விடாமல் தடுக்க, குண்டோதரன், பெரிய பாம்பு வடிவில் குறுக்கே படுத்துக் கொண்டான். படம் எடுத்தாடிய பாம்பை கருட மந்திரம் ஜெபித்து அடக்கினார் அந்தணர். மயங்கி தலை சாய்த்த பாம்பின் விஷ மூச்சுக் காற்று பட்டு சுற்றுப்புறங்கள் கருகின.
பாம்பாட்டியாக வந்தவர் ஈஸ்வரனாக இருக்குமோ என்று அந்தணர் நினைத்த மாத்திரத்திலேயே, ஈஸ்வரன் காட்சி தந்து, திருத்துருத்தி - காசிக்குச் சமமான ஸ்தலமே, இதை விட்டுப் போக வேண்டாம் எனக் கூறித் தடுத்து விட்டார் என ஸ்தல வரலாறு. இந்த நிகழ்வை நினைவூட்டும் வகையில் சிற்பங்கள் விமானத்தில் இருக்கின்றன. (காசி விஸ்வநாதனாகக் காட்சி தந்துள்ளார்)
சங்கிலி நாச்சியாரை மணந்தபின், அவளுக்குச் செய்து கொடுத்த வாக்குறுதியை மீறி, திருவொற்றியூரை விட்டகன்ற சுந்தரர், தான் இழந்த கண் பார்வையில் ஒரு கண்ணுக்குப் பார்வையை காஞ்சியில் பெற்றுக் கொண்டு, மேலும் பல ஸ்தலங்களுக்கு யாத்திரை சென்று விட்டு, திருவாவடுதுறை வந்து தரிசனம் செய்து கொண்டு புறப்படுகையில், மேனியெங்கும் கருமை படர்ந்து, பிணி ஒன்று பற்றிக் கொண்டது.
திருத்துருத்தி வந்து, தன் மீது கருணை காட்டும்படி வேண்டினார் சுந்தரர். சுந்தரரை வடகுளத்தில் குளிக்கும்படி பணித்தார் இறைவன். அவ்வாறே குளத்தில் மூழ்கி எழுந்த சுந்தரரின் பிணி அகன்று மேனி அழகானது. வடகுளம் எனும் சுந்தர தீர்த்தம், வெளிப் பிரகாரத்து வடமூலையிலுள்ளது. சுந்தரரின் சந்நிதி ஒன்றும் உள்ளது.
சதானந்த முனிவர், புலஸ்தியர் ஆகியோர் நீராடிய திருக்குளம். அகஸ்தியர் வழிபட்ட ஸ்தலம். தீண்டும் பொருள் யாவும் எரிப்பதால் பழி கொண்ட அக்னி, இவ்விறைவனைத் துதித்து தோஷத்தைப் போக்கிக் கொண்டார். வருணனின் சலோதர நோயும், விக்ரம சோழனின் மனைவியின் குஷ்ட நோயும் குணமான ஸ்தலம்.
தேவாரத்திருத்தலம்.