தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சக்கரப்பள்ளி என்னும் ஊரில் நாதசர்மா என்னும் சிவபக்தர் வாழ்ந்துவந்தார். அவரது மனைவி அநவித்யாவுடன் தினமும் திருவையாற்று கோயிலுக்குச் சென்று சுவாமி ஐயாறப்பனையும், அன்னை அறம் வளர்த்த நாயகியையும் வழிபடுவது வழக்கம்.
ஐப்பசி மாதக் கடைமுழுக்கு அன்று துலாகட்டத்தில் நீராட ஆசை கொண்டு இருவரும் மயிலாடுதுறை வந்தனர். இரவு வெகு நேரம் ஆனபடியால், கடைமுழுக்கு நீராடல் செய்ய இயலவில்லை. ஆசையுடன் நீராட வந்ததும் நிறைவேறாததாலும், மறுநாள் திரும்பிச் சென்று ஐயாறப்பனையும் தரிசிக்க முடியாது என்பதாலும் வருந்திக் கொண்டே இரவுப் பொழுதை கழித்தனர்.
அப்போது அவர்களது கனவில் தோன்றிய சிவபெருமான், மறுநாள் காலை சூரிய உதயத்திற்கு முன்பாக நீராடினால், கடைமுழுக்கு ஸ்நான பலன் கிட்டும் என்றும், மயூரநாதர் கோயிலுக்கு மேற்கிலுள்ள கோயிலில், அம்பிகை அறம் வளர்த்த நாயகியுடன் தாம் ஐயாறப்பராக எழுந்தருளியிருப்பதாகவும் கூறினார்.
அதன்படி இருவரும் விடியற்காலை துலாக்கட்டம் சென்று ஸ்நானம் செய்துவிட்டு, இவ்வாலயம் வந்து ஐயாறப்பரையும் அறம் வளர்த்த நாயகியையும் தரிசனம் செய்துவிட்டு, பின்னர் அபயாம்பிகையையும் மயூரநாதரையும் தரிசனம் செய்தனர். பின்னர் இருவரும் மயூரநாதருடன் ஐக்கியமானார்கள் என ஸ்தல வரலாறு கூறுகிறது.