தூம்ரலோசனன் எனும் அசுரன் அனைவரையும் துன்புறுத்தி வந்தான். அம்பாள் துர்க்கை வடிவம் கொண்டு அவனை அழிக்க வந்தாள். அம்பாளுக்கு உதவியாக போர் புரிய வந்தனர் சப்த கன்னியர்கள். காத்யாயன மகரிஷியின் ஆஸ்ரமத்திற்குள் ஒளிந்து கொண்டான் தூம்ரலோசனன். முனிவர் வேடத்தில் அசுரன் இருப்பதாக கருதிய சப்த கன்னியர்கள் முனிவரை அழித்து விட்டதால் அவர்களை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக் கொண்டது.
தாங்கள் கொண்ட பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விடுபட இங்கு தவமிருந்தனர் சப்த கன்னியர்கள். அவர்களுக்கு கடம்ப மரத்தடியில் தைப்பூசத்தன்று காட்சி தந்ததாக ஐதீகம்.
கோவில் கடம்பர், ஆதி கடம்பர், வழி கடம்பர், இளங் கடம்பர், பெருங் கடம்பர் எனும் ஐந்து கடம்பர்களுள் இவர் இரண்டாவது கடம்பர்.
பிரம்மன் ரதோத்ஸவம் செய்ததால் பிரம்மபுரி என்று பெயர். பலாசவனம் என்றும் கூறுவர். அகஸ்திய, கண்வ முனிவர்களுக்கும், தேவர்களுக்கும், சப்த கன்னியர்களுக்கும் கடம்ப மரத்தடியில் இறைவன் காட்சியருளிய ஸ்தலம். சோமாசுரனிடமிருந்து வேதங்களை கைப்பற்றும் முன் விஷ்ணு வழிபட்ட ஸ்தலம். அக்னி வழிபட்ட ஸ்தலம்.
இத்தலத்தில் ஐப்பசி முதல் கட்ட ஸ்நானம் விசேஷம் என்பர். காவிரியில் அம்பாளுடன் இறைவன் எழுந்தருளும் இடம்.
கார்த்திகையில் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. மாசி மகத்தில் பிரம்மோத்ஸவம் 10 நாட்கள். தைப்பூசத் திருவிழா 13 நாட்கள். தைப்பூசத் திருவிழாவின்போது பேட்டவாய்த்தலை, சிவாயம், கருப்பத்தூர், இராஜேந்திரம், முசிறி, வெள்ளூர் ஆகிய இடங்களிலிருந்து எழுந்தருளும் எட்டு ரிஷாபாரூடர்களை ஒரே சமயத்தில் தரிசிக்கும் வாய்ப்பை தருகிறது.
தேவாரத் திருத்தலம்.