பசுவாக மாறிய அம்பாள் தங்கிய இடங்களுள் ஒன்று. அதாவது கோ தங்கிய மஹால் கோமல் என்றானதாக கூறுவர்.
பிரபஞ்சத்தின் இயக்கத்தைப் பற்றி விளக்கிக் கூறிக் கொண்டிருந்தார் இறைவன். விளையாட்டாக அவரது கண்களைப் பொத்துகிறார் பார்வதி. உலகம் இருளில் மூழ்குகிறது. இயங்குவது நின்று போயிற்று. பிரபஞ்சம் இருளில் மூழ்கியதால் கோபமுற்ற சிவபெருமான் தனது கரத்திலிருந்து தோன்றும் ஹஸ்தாவர்ண ஜோதியில் தான் மறையப் போவதாகவும், அதைப் கண்டுபடித்து பின்னர் தன்னிடம் வந்து சேரவும் என்றும் கூறி, உமையவளை பசுவாக மாறும்படி சபிக்கின்றார்.
பூமியெங்கும் சிவஜோதியை தேடி அலைந்த பசுவாகிய அம்பாள், இத்தலத்தில் ஓர் ஹஸ்த நட்சத்திர நாளில் தோன்றிய ஹஸ்தாவர்ண ஜோதி எனப்படும் கோமளீய ஜோதியை கண்டதும் மகிழ்ந்தாள். முன்பே கூறியபடி அம்பாளை தன்னுடன் ஐக்யப்படுத்திக் கொண்டு கிருபை புரிந்ததனால் இவ்விறைவன் கிருபா கூபரேச்வரர் எனும் பெயர் கொண்டார் என ஸ்தல வரலாறு.
சித்தர்களும் மஹா முனிவர்களும் ஹஸ்த நட்சத்திர நாளில் இவ்விறைவனை வழிபட்டு சந்நிதியை வலம் வருவதாக ஐதீகம். அந்நாளில் லட்டு, போளி, கொழுக்கட்டை, வடை போன்ற பட்சணங்களை நைவேத்யம் செய்து, தானம் செய்து விட்டு, இறைவனையும் இறைவியையும் வலம் வந்து பிரார்த்திக்கின்றனர்.
வீர சோழ மன்னரால் கட்டப்பட்ட ஆலயம் என்பர்.