மலை - சத்யகிரி, தீர்த்தம் - சத்ய புஷ்கரிணி, விமானம் - சத்ய விமானம், பெருமாள் - சத்ய மூர்த்தி, சத்ய க்ஷேத்ரம், சத்யபுரம், சத்யவனம் என ஏழு சத்ய பெருமைகளைக் கொண்ட ஸ்தலம்.
ஸ்ரீ தேவி - பூ தேவி தேவியர்களை அபகரிக்க மது - கைடப அசுரர்கள் முயலுகையில், நித்திரையில் உள்ள விஷ்ணு மூர்த்திக்கு தொந்தரவு தரலாகாது என நினைத்த ஆதிசேஷன் தன் விஷ மூச்சு ஜ்வாலையால் அவர்களை விரட்டியடிக்கிறான். விஷ்ணுவின் அனுமதியின்றி இவ்வாறு செய்து விட்டோமே என அஞ்சி தனது ஐந்து தலைகளை சுருக்கிக் கொண்டு காட்சியளிக்கின்றான். இத்தலத்தில் அவ்வாறே காணலாம்.
இமயமலையிலிருந்து வந்த சத்ய முனிவருக்கு இங்கு பெருமாள் பிரத்யட்சமானதாக ஐதீகம். இந்தக் கோவிலை இந்திரத்யும்னன் எனும் அரசன் கட்டியதாக ஸ்தல புராணம் தெரிவிக்கின்றது. இரண்டாம் நந்திவர்மன் காலத்தைச் சேர்ந்த சாத்தன் மாறன் என்பவன் இக்கோவிலைப் புதுப்பித்ததாக கல்வெட்டு குறிப்பொன்று கூறுகிறது.
வீரபாண்டிய கட்டபொம்மனும், ஊமைத்துரையும் இங்குள்ள கோட்டையில்தான் சிறிது காலம் ஒளிந்திருந்தனர் என்றும், தொண்டைமானால் காட்டிக் கொடுக்கப்பட்டு, பின் வெள்ளையர்களிடம் பிடிபட்டனர் என்று கூறப்படுகிறது. ஒன்றுக்குள் ஒன்றாக ஏழு வளையங்கள் கொண்டுள்ள கோட்டை.
பெருமாளை மெய்யன் என்று மங்களாசாசனம் செய்துள்ளார் ஆழ்வார். மெய்யன் (அல்லது) மெய்யப்பன் எனப்பட்ட பெருமாளை திருமெய்யன் என்று அழைக்கப்பட, அதுவே மருவி திருமயம் என ஊர்ப் பெயர் ஆனதாகக் கூறப்படுகிறது.