மூலவர்: சத்யவாகீஸ்வரர், அம்பாள்: கோமதியம்மை.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் சத்யவாகீஸ்வரர். கம்பீரமாக தரிசனம் தரும் அழகான லிங்க மூர்த்தம். இவருக்கு பரிதி நாயகன், திரிபுரஹரன் ஆகிய திருநாமங்களும் உண்டு. புறமேரிச்சுவரமுடைய நாயனார் என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உத்தராயணத்தில் மூன்று நாட்களும், தட்சிணாயணத்தில் மூன்று நாட்களும் சூரியனின் ஒளிக்கதிர்கள் ஸ்வாமி மீது படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன.
அம்பாள் கோமதியம்மை எனப்படும் ஆவுடை நாயகியுடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள்.
ஸ்தல விருட்சமான புன்னை மரத்தடியில் புன்னைவனநாதர் மற்றும் திரிபுரசுந்தரி கோவில் கொண்டு அருள்பாலிக்கின்றனர்.
புன்னைவனநாதர் கருவறை முன்பாக உள்ள மண்டபம் சிற்ப வேலைப்பாடுகளில் சிறந்து விளங்குகிறது. பீமனைப் பிடிக்க வரும் புருஷா மிருகம் அவனது தோளைப் பற்றும் பாவனையிலும், யாகசாலை இருக்கும் பகுதியில் ஒரு காலை வைத்துவிட்ட குதூகலத்தில் பீமனும் காணப்படுவது எடுத்துக்காட்டாக உள்ளது. வீரமார்த்தாண்ட பாண்டியன், சுந்தரர், சேரமான்பெருமான் ஆகியோரின் திருவுருவங்கள் அழகாக இருக்கின்றன. இசைத் தூண்கள் பெருமைக்கு உரியவை. ராஜகோபுரத்தில் 1500 (ஸ்டக்கோ - லைம் மார்டர்) சுதைச் சிற்பங்கள் புராணத் தொடர்புடைய நிகழ்வுகளைத் தெரிவிக்கின்றன.
அன்னலட்சுமியின் திருவுருவம் நினைவில் நிற்கிறது.
மூன்று முகங்கள், மூன்று கைகள், மூன்று கால்களுடன் காட்சி தரும் ஜ்வரஹரேஸ்வரரின் திருவுருவம் மிகப் பெரிய அளவில் உள்ளது. இவருக்கு மிளகு அரைத்து நைவேத்தியம் செய்தால் ஜுரம் கண்டவர்கள் சுகமடைவார்கள்.
வலச்சுற்றில் நடராஜப் பெருமான் சந்நிதி கொண்டுள்ளார். ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட ஆறடி உயரத் திருமேனி. கொள்ளை அழகுடன் காணப்படுகிறார். அருகே சிவகாமி அம்மையுடன் இருக்க, இரண்டு பக்கங்களிலும் பதஞ்சலியும், வியாக்ரபாதரும் காணப்படுகின்றனர்.
முன் மண்டபத்தில் காணப்படும் 16 இசைத் தூண்களும் ஏழு ஸ்வரங்களை மூன்று ஸ்தாயிகளில் ஒலிக்கும் சிறப்பைக் கொண்டவை.
135 அடி உயரமும் 9 நிலைகளைக் கொண்டதுமான ராஜகோபுரம் பிரசித்தி பெற்றது. சுவற்றின் இரண்டு பக்கங்களிலும் மூலிகைகளைக் கொண்டு வரையப்பட்ட வண்ண ஓவியங்கள் ராமாயண - மகாபாரத இதிகாசங்களுடன் தொடர்புடையவை. ஆவுடையார் கோவிலில் உள்ளது போல் அழகிய கொடுங்கைகள் உள்ளன.
தேவார வைப்புத்தலம்.