சிவ பெருமானிடமிருந்து பாசுபத அஸ்திரத்தை பெற்றால், கௌரவர்களை எளிதில் வெல்ல முடியும் என வியாச முனிவர் யோசனை கூறியதின்பேரில், தர்மரின் அறிவுரைப்படி கானகம் சென்று, கடுந்தவம் மேற்கொண்டான் அர்ச்சுணன். நாரதர் மூலமாக இதனை அறிந்த துரியோதனன், அர்ச்சுணனை கொல்ல முகாசுரனை பன்றி வடிவில் அனுப்புகிறான்.
இதே நேரத்தில் அர்ச்சுணனைக் காப்பாற்ற சிவ பெருமான் வேடன் வடிவிலும், அம்பிகை வேடுவச்சி வடிவிலும், முருகன் வேட்டுவக் குமாரனாகவும், நந்தி தேவர் மான் வடிவிலும் காட்டிற்குள் வருகின்றனர்.
எதிர்பாராத நேரத்தில் அர்ச்சுணன் மீது பாய்ந்தான் பன்றி வடிவிலிருந்த முகாசுரன். தன்னை காத்துக் கொள்ள காண்டீபத்தை வளைத்து அம்பை விட்டான் அர்ச்சுணன். அதே சமயம், பிநாகம் எனும் வில்லை வளைத்து அம்பை விட்டார் வேடன் வடிவிலிருந்த சிவ பெருமான்.
தான் எய்த அம்பினால்தான் பன்றி இறந்தது என இருவரும் வாதம் புரிந்தனர். வாக்குவாதம் வலுத்து விற்போர் துவங்கியது. அர்ச்சுணனின் ஆற்றல் வேடனிடம் எடுபடவில்லை. பின்னர் மற்போர் புரிந்தனர். அதிலும் அவனைத் தோற்கடித்த வேடன், பின்னர் தனது நிஜ ஸ்வரூபத்தைக் காட்டினார் என ஸ்தல வரலாறு. மகேசனையே எதிர்த்து போரிட்ட தனது அறிவீனத்தை எண்ணி மனம் வருந்திய அர்ச்சுணன், பிழையை பொறுத்தருள வேண்டினான். சிவ பெருமானும் அவன் கோரிய பாசுபத அஸ்திரத்தை கொடுத்து அருளினார்.
மற்றொரு சிறப்பான நிகழ்வும் இத்தலத்தில் நடைபெற்றுள்ளது. முன்பொரு சமயம், ஆணவத்தால் வாதம் புரிந்த உமையவள், தண்டனை பெற்று பூலோகத்தில் வலைஞர் குலப் பெண்ணாக அதாவது மீனவப் பெண்ணாக பிறந்து, இவ்வுலகில் வாழ்ந்து வந்தாள்.
சோமுகாசுரனிடமிருந்து வேதங்களை மீட்கும் பணியில், மச்சாவதாரம் எடுத்த திருமால், வேதங்களை மீட்ட பிறகும், உக்ரம் அடங்காமல் கடலை கலக்கி, செம்படவர்களை அச்சுறுத்திக் கொண்டிருந்தார். வலைஞர் குல வாலிபனாக வந்த சிவ பெருமான் மச்சத்தை அடக்கி சாந்தப்படுத்தினார். பரிசாக இங்கு மீனவப் பெண்ணாக வளர்ந்து வரும் உமையவளை திருமணம் செய்து கொண்டார்.
மீனவராகவும், வேடுவராகவும் காட்சி தந்து சிவபெருமான் அருள் புரிந்த ஸ்தலம்.
தேவாரத்திருத்தலம்.