பராய் மரங்கள் மிகுந்து காணப்படும் பகுதியாக விளங்கியதால் இவ்வூர் திருபராய்த்துறை என்ற பெயரைப் பெற்றது. பராய் மரத்திற்கு வடமொழியில் தாருகா விருட்சம் என்று பெயர். இதனால் இவ்வூரை தாருகாவனம் என்றும் அழைப்பார்கள். இம்மரத்து இலைகள் பசுவின் நாக்கு போன்று காணப்படும்.
இவ்வூரின் பெயரைச் சார்ந்து இறைவன் பராய்த்துறை நாதர் என்றும், தாருகாவனேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். செல்வர் என்றும் அழைப்பார்கள்.
காவிரியானவள் உபநதிகளுடன் சேர்ந்து அகண்ட காவிரியாக ஓடும் இடம் திருபராய்த்துறை. பின்னர் கிழக்கு நோக்கிப் பாய்ந்து அரை கி.மீ. தூரம் கடந்ததும் காவிரியாகவும், கொள்ளிடமாகவும் பிரிந்து அதன் பின்னர் துணை ஆறுகளாகவும், கிளைக் கால்வாய்களாகவும் மாறுவாள். எனவே காவிரியின் முழுமையை அனுபவிக்க இங்கு துலா ஸ்நானம் (முதல் முழுக்கு) விசேஷமாக கருதப்படுகிறது.
சூரியன் துலா ராசியில் பிரவேசிக்கும் நேரமான ஐப்பசியில் நீர்வரத்து அதிகமிருக்கும். பல்வேறு தாதுக்கள், மூலிகைகள், பராய் மரத்து இலைகள் ஆகியவற்றுடன் காவிரி ஓடி வருவது கூடுதல் நன்மை பயக்கும். முதல் முழுக்கு திருப்பராய்துறையிலும், கடைசி முழுக்கு மயிலாடுதுறையிலும் விசேஷம் என்பர்.
இறைவனை விட தங்களது அனுஷ்டானங்களே உயர்ந்தது என்ற எண்ணமும், தங்களது பத்தினிகளே கற்பில் சிறந்தவர்கள் என்ற ஆணவமும் கொண்டிருந்த தாருகாவனத்து முனிவர்களின் செருக்கை அடக்கி பாடம் புகட்டினார் இறைவன்.
தாருகாவனத்து முனிவர்கள் அனுஷ்டான ஹோமம் முடிக்கவிருக்கும் அந்தி நேரத்தில், பேரெழிலுடன் விளங்கும் மோகினிப் பெண் வடிவம் கொண்ட திருமால், அவர்களுக்கு முன்பாக ஒயிலாக நடந்து சென்றாள். அனுஷ்டானங்களையும் ஹோமங்களையும் மறந்து அத்தனை முனிவர்களும் அவள் அழகில் மயங்கி அவளைப் பின் தொடர்ந்தனர்.
முனிபத்தினிகள் வாசம் செய்யும் குடில்களருகே கையில் ஓடேந்தி பிச்சை கேட்கும் பிட்சாடனராக வந்தார் சிவபெருமான். பிச்சையிட வந்த முனிபத்தினிகள் பிட்சாடனரின் தேக அமைப்பு, அழகு, கம்பீரம், வசீகரம் ஆகியன கண்டு மயங்கி நின்றனர்.
தங்களது மனைவிகளின் கற்பு மற்றும் தங்களது விரத மேன்மை ஆகியவைகளை இழந்த முனிவர்கள் வெகுண்டார்கள். அபிசார வேள்வி நடத்தி அதிலிருந்து தோன்றியவைகளை பிட்சாடனர் மீது ஏவினார்கள்.
மான், மழு ஆகியவைகளை கரங்களில் தாங்கியும், புலியின் தோலை உரித்து ஆடையாக தரித்தும், பாம்புகளை ஆபரணங்களாகக் கொண்டும் வேள்வியிலிருந்து தோன்றியவைகளை எதிர் கொண்டார் சிவபெருமான்.
தங்களது இறுமாப்பிற்கு கிடைத்த தண்டனையாக ஏற்றுக் கொண்ட முனிவர்கள், பிட்சாடனரை பணிந்து நடந்தவைகளுக்கு மன்னிப்பு வேண்டினர். பின்னர் சிவபெருமானைக் குறித்து தவம் மேற்கொண்டனர்.
தேவேந்த்ராதி முனிவர்களின் ஆணவத்தை அடக்கி அவர்களுக்கு ஈஸ்வர வித்தையை உபதேசிக்க தோன்றியவளே ஹேமவர்ணாம்பிகை.
தேவாரத் திருத்தலம்.