மூலவர்: திருமணிச்சேறை உடையார், அம்பாள்: திருமணி நாயகி.
200 அடி உயரமும், 51 படிக்கட்டுக்களும் கொண்ட சிறிய மலை மீது எழுப்பப்பட்ட ஆலயம். 700 வருஷங்களுக்கு முற்பட்டது என்பர். படியேறும் பக்தர்களின் வசதிக்காக மேற்கூரை போடப்பட்டுள்ளது.
மலையடிவாரத்தில் விநாயகரையும் நவக்ரஹங்களையும் தரிசிக்கலாம். மலைப்பாதையில் சங்கு வடிவத்திலுள்ள சங்கு தீர்த்தம், விருட்சங்கள், நாகப் பிரதிஷ்டைகள் ஆகியவற்றைக் காணலாம்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிகின்றார் திருமணிச்சேறை உடையார். உயரமான பாணத்துடன் கூடிய அழகிய லிங்கம். பஞ்சநாகம் குடை பிடிக்க, கம்பீரமாக அமர்ந்த லிங்கம். ஐந்தரை அடி உயரமுள்ள திருமேனி. நவபாஷாணம் கொண்டு உருவாக்கிய தேஜோமய லிங்கம். கிழக்கு பார்த்த சந்நிதி. அகஸ்தியர் வழிபட்ட லிங்கம்.
தெற்கு நோக்கிய சந்நிதியில் அம்பாள் திருமணி நாயகி எழுந்தருளி நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகின்றாள்.
சிவாலய கோஷ்ட மூர்த்தங்கள் அனைத்தும் அழகாக இருக்கின்றன. பிரகாரத்தில் வெள்ளை பளிங்கு திருவுருவமாக சித்தி விநாயகர் எழுந்தருளியுள்ளார்.
பெரிய குகை ஒன்று உள்ளது. அதில் பாம்பு உருவில் பாம்பாட்டி சித்தர் இருப்பதாக கூறுவர். இங்குள்ள சுனைப்பகுதியை நாகம் ஒன்று காவல் காப்பதாக கூறுகின்றனர். பாம்பு கடிக்கு மருந்தாக இந்த சுனை தீர்த்தத்தை பயன்படுத்துகின்றனர்.