சந்திரசேன பாண்டியன் ஆண்ட காலத்தில், ஒரு பிரளயம் உண்டானது. நாட்டை அழிவிலிருந்து காக்கும்படி வேண்டி இறைவனிடம் தஞ்சமடைந்தான் அரசன். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் அடியவர் வடிவில் வந்து, பூமியில் ஒரு பிலத்தை உண்டாக்கி அதற்குள் பிரளய வெள்ளத்தைப் புகச் செய்தார். (பிலம் - பாதாளம்) வெள்ளம் சுழித்தபடியே பிலத்திற்குள் சென்றபடியால் திருச்சுழியல் என்ற பெயரை இவ்வூர் பெற்றது.
இதை கவ்வைக் கடல் என்பார்கள். கோவிலின் வாசலில் உள்ள திருக்குளம். கவ்வை என்றால் ஒலி என அர்த்தம். பிலத்திற்குள் பாய்ந்த நீர் ஒலித்துக் கொண்டே உட்புகுந்ததால் கவ்வைக் கடல் எனப் பெயர் வந்தது. அழகிய நீராழி மண்டபமும் உள்ளது.
அரச மரங்கள் நிறைந்து காணப்படுகின்றன.
இரணியன், இரண்யாட்சன் ஆகிய இரண்டு அரக்கர்கள் தீண்டியதால் தோஷம் கொண்ட பூமி தேவி, இத் தலத்தில் தீர்த்தம் ஒன்றை உண்டாக்கி, இவ்விறைவனை வழிபட்டு தனது தோஷத்தைப் போக்கிக் கொண்டாள்.
கௌதம முனிவரின் சாபத்தால் கல்லாகிப் போன அகலிகை, ராமன் அருளால் சாபம் நீங்கப் பெற்று இத் தலம் வந்து இவ்விறைவனை வழிபட்டு தன் மீதான குறை முழுவதுமாக நீங்கப் பிரார்த்தித்தாள்.
கௌதம முனிவருக்கும் அகலிகைக்கும், சிவபெருமான் உமையன்னையுடன் திருமணக் கோலத்தில் காட்சி தந்து அருளிய ஸ்தலம்.
அர்ச்சுணன் தீர்த்த யாத்திரை நிமித்தமாக வந்தபோது தனது காண்டீபத்தால் அர்ஜுண தீர்த்தம் ஒன்றை உண்டாக்கி (கோடி தீர்த்தம்) இவ்விறைவனை வழிபட்டுள்ளான். இங்கு தவமிருந்த கௌண்டின்ய முனிவர் வேண்டிக் கொண்டதால் உண்டான ஆறு கௌண்டின்ய ஆறு. தற்போது குண்டாறு என்ற பெயரிலுள்ளது.
தைப்பூச பழநியாண்டவர் உற்சவம், பங்குனியில் கௌதமர் - அகலிகைக்கு கல்யாண கோலம் காட்டியருளிய உற்சவம், மாசி மகத்தன்று கவ்வைக் கடலில் நீர்ப்பெருக்கு அதிகரித்து காணப்படும்.
பார்வதி தேவியார் திருமணம் வேண்டி தவமிருந்த ஸ்தலம்.