ஸ்தல வரலாறு:
பிரளயம் சூழ்ந்த காலத்தில், பூமியை தோணியாக்கி மிதந்து வந்த சிவபெருமான் மண்ணியாற்றங்கரை அருகே நிறுத்தினார். வெள்ளத்தில் மிதந்து வந்த இலுப்பைக்கிளை ஒன்றினை பார்த்த உமாதேவியார் அது என்னவென்று கேட்க, அந்த மரத்தின் தெய்வீகத்தன்மையை விளக்கினார் சிவபெருமான். அதைக் கேட்ட விநாயகரும், சுப்ரமண்யரும் இங்கேயே எழுந்தருளி இருக்க வேண்டினர்.
அவர்களது வேண்டுகோளுக்கிணங்க இங்கே கோவில் கொண்ட சிவபெருமான், இலுப்பை மரத்தை அக்னி திக்கில் நிற்க பணித்தார். பசு நெய்யினால் விளக்கேற்றினால் கிடைக்கும் பலனை, இலுப்பை எண்ணையில் ஏற்றினாலும் கிடைக்குமாறு வரத்தை கோரிப் பெற்றுக் கொண்டது விருட்சம்.
படைக்கும் திறன் அகன்ற பிரம்மா, அதை மீண்டும் பெற இங்கு பிரம்ம தீர்த்தம் உண்டாக்கி, நீராடி இலுப்பை மரத்தை பூஜித்து, இவ்விறைவனை வேண்டி, மீண்டும் படைக்கும் தொழிலை கைவரப் பெற்றார்.
விருத்தாசுரனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்க, இந்திரன் பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, இவ்விறைவனை வேண்டி தோஷம் நீங்கப் பெற்று இந்திரலோகம் சென்றான் என ஸ்தல வரலாறு.
சூதாட்டத்தில் நாடு நகரங்களை இழந்த பஞ்ச பாண்டவர்கள் உரோமச முனிவரின் அறிவுரைப்படி இத்தலம் வந்தனர். இங்கு வரும் முன் தங்களது ஆயுதங்களை வாளப்புத்தூர் எனும் ஊரில் மறைத்து வைத்தனர். இங்கு ஒரு மண்டலம் தங்கி, பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, தெய்வீக விருட்சத்தை வணங்கி இவ்விறைவனை வழிபட்டனர். ஒவ்வொருவரும் ஒரு சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டு மகிழ்ந்தனர்.
துர்ப்புத்தி கொண்ட சகுனியின் யோசனையின்பேரில், துரியோதனன் பிரம்ம தீர்த்தத்தில் நஞ்சை கலக்கிறான். தீர்த்தத்திற்கு நச்சுப்பொய்கை என்ற பெயரும் வந்தது. இந்த நஞ்சு பாண்டவர்களைக் கொல்லும் என எண்ணினான் துரியோதனன்.
நீலகண்டேஸ்வரரின் அருளாலும் தேவியின் கருணையாலும் நஞ்சு அமுதமாக மாறியது. நஞ்சை அமுதமாக்கிய அமிர்த கலசம்தான் அம்பாள் அமிர்தகரவல்லியின் கரங்களில் உள்ளது.
மண்ணியாற்றங்கரை அருகே இத்தலம் அமைந்திருந்ததால் பழமண்ணிப்படிக்கரை எனப் பெயருற்றது. சூரன் வதம் முடித்து தல யாத்திரை மேற்கொண்ட முருகன், இத்தலத்தில் வேல் கொண்டு உருவாக்கியதே சுப்ரமண்ய நதி எனப்படும் மண்ணியாறு என ஸ்தல வரலாறு.
மதூகம் என்றால் இலுப்பை என்று அர்த்தம். இலுப்பை மரங்கள் மிகுந்து காணப்பட்ட பகுதியானதால் இலுப்பைப்பட்டு எனப் பெயர் கொண்டது.
சித்ரா பௌர்ணமி இங்கு விசேஷமாக கொண்டாடப்படுகின்றது. பஞ்ச மூர்த்திகளும் உலா வருவார்கள்.
தேவாரத்திருத்தலம் - பஞ்சலிங்க ஸ்தலம்.