மாத்யந்தனர் எனும் முனிவர் சிவபூஜை செய்ய மலர்களைப் பறிப்பதற்கு ஏதுவாக, மரத்தைப் பற்றிக்கொண்டு ஏற, புலிக்கால் வேண்டுமெனப் பிரார்த்தித்து, புலிக்காலை வரமாகப் பெற்றார். இதனால் இவரை வியாக்ரபாதர் என்றும் புலிக்கால் முனிவர் என்றும் கூறுவர். புலிக்கால் முனிவர் வழிபட்ட ஸ்தலம் என்பதால் புலியூர் எனப்பட்டது. பாதிரி மரங்கள் மிகுந்த பகுதியானதால் பாதிரிப்புலியூர் என்றானது. ஞாழல் எனும் புலிநகக் கொன்றை மரங்கள் உள்ளதால் கடைஞாழல் எனும் புராதனப் பெயரும் உண்டு.
சூரியனையும் சந்திரனையும் இரு கண்களாகக் கொண்ட சிவபெருமானின் கண்களை, பார்வதி தேவி தனது கைகளால் விளையாட்டாகப் பொத்தி மூடினார். க்ஷண நேரம் உலகில் இருள் சூழ்ந்தது. தனது செய்கைக்கு வருத்தம் தெரிவித்தாள் பார்வதி. அதற்குப் பரிகாரமாக பூலோகத்திலுள்ள சிவாலயங்கள் சென்று, சிவபூஜை செய்யப் போவதாகக் கூறினாள். "எந்த ஸ்தலத்தில் உனது இடது கண்ணும் இடது தோளும் துடிக்கின்றதோ அங்கு வந்து உன்னை மணப்பேன்" என்று கூறினார் சிவபெருமான்.
பல சிவாலயங்கள் சென்று சிவபூஜை செய்து மகிழ்ந்திருந்த பார்வதிக்கு, இந்த ஸ்தலம் வந்ததும் இடது கண்ணும் இடது தோளும் துடித்தது. உடனே இங்குள்ள பாதிரி விருட்சத்தின் கீழ் அமர்ந்து தவம் மேற்கொண்டாள். இவளது தவத்தினால் மகிழ்ந்த சிவபெருமான் ரிஷபவாகனராகக் காட்சி தந்து, அம்பிகையை இடப்பக்கமாக எழுந்தருளச் செய்து, அம்பிகை பூஜித்த லிங்கத்தினுள் மறைந்தார்.
பாதிரி மரம் நெட்டையாக வளரும் இயல்புடையதாக இருந்தாலும், அம்பிகை சிவபூஜை செய்வதற்காக நாற்புறமும் கிளைகளைப் பரப்பி, தழைத்து, குடை போல் நிழல் தந்ததால் 'தழைத்த பாதிரி' என அழைப்பர்.
அம்பிகை சிவபூஜைக்காக மலர்களைத் தேடி அலையாமலிருக்க, தன்னிடமே 12 விதமான பூக்களைப் பூக்க வைத்து, அம்பிகைக்கு உதவியதாம். இப்போது பட்டுப் போயிருந்தாலும் அதன் தெய்வீகத்தன்மை கருதி செப்புத் தகடு வேய்ந்து பாதுகாத்து வருகின்றனர்.
தருமசேனராக சமண மதத்திலிருந்து மாறி, சைவத்திற்கு வந்து, திருநாவுக்கரசரான பின்னர், பலவிதமான துன்பங்களுக்கு ஆளானார் அப்பர் பெருமான். அவரை மீண்டும் சமணத்திற்கு கொண்டுவர, சோற்றில் விஷம் வைத்துக் கொடுத்தனர், தப்பிப் பிழைத்தார். யானையால் இடறப்பட வேண்டும் என ஆணையிடப்பட்டார். யானை நாவரசரை வலம் வந்து வணங்கி வந்த வழியே சென்றது. சுண்ணாம்பு காளவாயில் 7 நாட்கள் வைத்திருந்தனர். புதுப் பொலிவுடன் வெளிப்பட்டார். இப்படியாக ஒவ்வொரு சோதனையிலும் வெளிப்பட்டு சைவ சமயத்திற்குத் தொண்டாற்றினார் என வரலாறு.
பெரிய கருங்கல் ஒன்றில் கட்டி, கடலில் தூக்கி வீசினார்கள். கல் மிதந்தது. "கற்றூணில் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயமே" எனப் பாடிக் கொண்டே மிதந்த கல் மீது அமர்ந்து அப்பர் பெருமான் கரை சேர்ந்தார். தெப்பமாக மிதந்து வந்து அப்பர் கரையேறிய இடம் 'கரை ஏறவிட்டான் குப்பம்' எனும் ஊர் அருகாமையில் உள்ளது.
சித்தர் வடிவில் வந்து இறைவன் மக்களின் துன்பங்களை நீக்கியதாகக் கூறுவர்.
தேவாரத்திருத்தலம் - ஐந்து புலியூர்களில் ஒன்று.