இலந்தை வனமாக இருந்த இந்த ஸ்தலத்தில் அமர்ந்து உமையன்னை தவம் மேற்கொண்டாள். தட்சிணாமூர்த்தி ஸ்வரூபமாக பிரத்யட்சமான உமாதேவிக்கு 'ஓம்' எனும் பிரணவத்தையும் தத்துவ விளக்கங்களையும் உபதேசித்தார்.
தட்சிணாமூர்த்தியிடம் அம்பிகை உபதேசம் பெற்ற ஸ்தலம் என்பதால் பிரணவ வியாக்ரபுரம் எனப்படுகிறது. ஓமம் என்றால் வேள்வி. பிரணவப் பொருள் உபதேசம் நடந்த ஸ்தலம் ஆதலால் 'ஓம் - ஆம் - புலியூர்' ஓமாம்புலியூர் என்றானது.
அம்பாளுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசிக்கும்போது முருகன் அங்கு வந்ததாகவும், நந்தி அவரை உள்ளே விட மறுத்ததால், வண்டு உருவில் சென்று தாயாரின் கூந்தலிலுள்ள மலரில் அமர்ந்து கொண்டு உபதேசத்தை கேட்டறிந்ததாகவும், இதையே சுவாமி மலையில் தந்தைக்கு உபதேசித்தருளினார் என்றும் கூறுவர்.
வியாக்ரபாத முனிவர், தில்லை நடராஜனை தரிசிப்பதற்காக இவ்வூர் வழி செல்கையில், இரவு நேரம் ஆகிவிட்டபடியால், நடராஜரை தரிசிக்க முடியவில்லையே என வருந்தினார். இவ்விறைவன் வியாக்ரபாதருக்கு இங்கேயே நடராஜராக காட்சி தந்தருளினார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. இந்த விக்ரஹத்திற்கு பூஜை செய்தார் வியாக்ரபாதர். அந்த விக்ரஹம் இவ்வாலயத்து தெற்கு பிரகாரத்தில் உள்ளது.
குரு தோஷம் நீங்க இந்த தட்சிணாமூர்த்தியை வழிபட நலன் கிடைக்கும். ரேவதி நட்சத்திரம் கொண்டவர்கள் வழிபட வேண்டிய ஸ்தலம்.
புலிக்கு பயந்து வில்வமரம் ஏறிக்கொண்ட வேடன் ஒருவன், இரவு முழுவதும் மரத்திலமர்ந்து வில்வ இலைகளைப் பறித்து கீழே போட்டுக் கொண்டிருந்தான். மரத்தடியிலிருந்த சிவலிங்கத்தின் மீது வில்வ தளங்கள் விழுந்ததால், மகிழ்ந்த இறைவன் பிரத்யட்சமாகி அவனுக்கு முக்தி அளித்தார்.
தேவாரத்திருத்தலம் - ஐந்து புலியூர்களுள் ஒன்று.