இப்பகுதியை அரசாண்ட மன்னன் தீவிர சிவபக்தன். தான் இறந்த பிறகு தனது உடல் புதைக்கப்பட்ட இடத்தில் லிங்கப் பிரதிஷ்டை செய்யப்பட்டு கோவில் எழுப்ப வேண்டும் என ஆசை கொண்டிருந்தான். இவருக்கு பின்னர் அரசாள வந்த மன்னனால் முந்தைய மன்னனின் ஆசை நிறைவேற்றப்பட்டது. உடல் புதைக்கப்பட்ட இடத்தில் எழுந்தருளிய மூலவர் என்பதால் மசான ருத்ரர் என அழைக்கப்படலானார்.
இவ்வாலயத்து அதிசய விநாயகரின் கால் ஒடிந்திருப்பதன் காரணம் என்னவென்று செவி வழி கதை ஒன்று நிலவுகிறது. அதாவது இவ்வாலயத்து அர்ச்சகர் ஒருவரை நல்வழிப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டார் வயோதிகர் ஒருவர். பல முறை முயன்றும் தோல்வியே கிட்டியதாம். ஒரு நாள் அர்ச்சகர் வீட்டிற்கு சென்ற வயோதிகர் அவரது வீட்டுக் கதவை தட்டினார். கோபத்தில் வயோதிகரை தள்ளிவிட்டார் அர்ச்சகர். இதனால் வயோதிகரின் கால் ஊனமுற்றது. மறு நாள் அர்ச்சகர் கோவிலுக்கு சென்று விநாயகர் சந்நிதி முன்பு நின்ற போது, விநாயகர் விக்ரஹத்தின் கால் ஊனமுற்றிருப்பதைப் பார்த்து திடுக்கிட்டார். வயோதிகராக வந்தவர் விநாயகர் என்பதை அறிந்து, தனது செய்கைக்காக மிகவும் வருத்தப்பட்டார் எனும் கதை வழக்கத்திலுள்ளது.