மூலஸ்தானத்தில், மூலவராக ஸ்ரீ அரங்கநாதர், கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு, பாம்பணை மீது சயனக் கோலத்தில் சேவை சாதிக்கின்றார். கார்க்கோடக சயனம். சாந்தாகாரமாக விஷ்ணு பள்ளி கொண்ட ஸ்தலம். திருவடிக்குச் சமீபத்தில் பூமி பிராட்டியார் அமர்ந்துள்ளார். எதிரே மார்க்கண்டேய மகரிஷி காணப்படுகிறார். தனது அபய முத்திரையுடன் கூடிய வலது கரத்தை மார்க்கண்டேயரின் சிரசின் மீது ரங்கநாதர் வைத்துள்ளார். இடது கரம் பிரம்மாவை அனுக்ரஹம் செய்கிறது.
அரசவனத்து பெருமாளான இவரை 'அபயப்ரதான ரங்கநாதர்' என்று போற்றுவர். மார்க்கண்டேய மகரிஷிக்கு அபயம் தருவதாக ஐதீகம்.
மடப்பள்ளி திருப்பணிக்காக பூமியை அகழ்ந்தபோது பூமியிலிருந்து கிடைத்த திருவுருவம். இளங்கோவடிகள் குறிப்பிட்ட ஆடகமாடம் இதுவே என்பர்.
உற்சவராக ஸ்ரீநிவாசப் பெருமாள் சேவை சாதிக்கின்றார். சதுர்புஜதாரியாக அழகான திருமேனியுடன் காட்சி தருகிறார். ஸ்ரீ தேவி, பூ தேவி தேவியர்கள் உடன் உள்ளனர்.
புராதன ரங்கநாதர் எனப்படும் ஆதிமூர்த்தி தனி சந்நிதி கொண்டு சயனக் கோலத்தில் சேவை சாதிக்கின்றார்.
தனிக் கோவில் நாச்சியாராக ரங்கநாயகித் தாயார் அமர்ந்த திருக்கோலத்தில் மூலவராகவும், உற்சவராகவும் சேவை சாதிக்கின்றார்.
மூலவராகவும், உற்சவராகவும் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கும் ஆண்டாள் தனி சந்நிதி கொண்டுள்ளார்.
கண்ணன், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர், தும்பிக்கை ஆழ்வார் ஆகியோரை சேவிக்கலாம். வீணாதரராகக் காட்சி தரும் திருப்பாணாழ்வார் திருவுருவம் அழகாக இருக்கின்றது.