நவரத்னங்களைக் குறிக்கும் வகையில் ஒன்பது பாறைகளுக்கு இடையே இருப்பதால் மாணிக்கமலை (ரத்னகிரி) எனவும், மன்னன் வீசிய வாளைத் தடுத்ததால் வாட்போக்கி எனவும் அழைக்கின்றனர். பஞ்ச பாண்டவர்கள் தங்கியதால் ஐவர் மலை எனப் பெயர்பெற்று, பின்னர் மருவி ஐயர் மலை என்றானதாகவும் கூறப்படுகிறது.
மலைக் கோவிலும் பிரகாரங்களும் ஓம் எனும் வடிவில் உள்ளதால் சிவாயமலை என்றும் கூறப்படுவதுண்டு.
ஆரியராஜன் ஒருவன் இழந்த ரத்ன கிரீடத்தைப் பெற விரும்பி இத்தலத்திற்கு வந்தான். அந்தணர் வடிவில் தோன்றிய இறைவன், இங்குள்ள நீர்த் தொட்டி ஒன்றைக் காண்பித்து அதில் நீரை நிரப்புமாறு பணித்தார். எவ்வளவு நீரைக் கொட்டினாலும் தொட்டி நிரம்பாததால் ஆத்திரம் கொண்ட அரசன், அந்தணனை வாளால் வெட்ட முற்பட்டான். அந்தணர் உரு நீங்கி சுயவுருவம் காட்டிய சிவபெருமான், அவ்வாளைப் போக்கி, ரத்ன கிரீடத்தைக் காண்பித்தார். அதனால் ரத்னகிரீஸ்வரர் எனும் திருநாமம் கொண்டார். வெட்டுண்ட தழும்பைக் கொண்டதால் முடித்தழும்பர் என்றானார்.
இடையன் ஒருவன் தினமும் ஒரு குடம் பாலை அபிஷேகம் செய்து வந்தான். ஒரு நாள் அவனது பால் குடத்தை காக்கை ஒன்று கவிழ்த்து விட்டது. இதனால் மனம் வருந்திய பக்தனுக்காக காகத்தை எரித்தார். இந்த நிகழ்விற்குப் பிறகு இன்றைய நாள் வரை காக்கை மண்டபத்தைத் தாண்டி காக்கைகள் பறப்பதில்லை.
பூம்புகாரைச் சேர்ந்த வணிகர்கள் இத்தலம் வந்து தாங்கள் கொண்டு வந்திருந்த பொருட்களை பதினொன்றாகப் பிரித்தனர். பல முறை பிரித்தும் அவை பன்னிரெண்டு பங்குளாகவே பிரிந்தன. 12வது பங்கை இறைவனுக்கே தந்து விட்டனர். அது முதல் வருடா வருடம் தங்களது வருவாயின் 12வது பங்கை இவ்விறைவனுக்கே தருகின்றனர். பன்னிரண்டாம் செட்டியார்கள் என்றழைக்கப்படும் இவ்வணிகர்களுக்கு இவ்விறைவனே குல தெய்வமாக விளங்குகிறார்.