பல கோடி வருடங்களுக்கு முன்னால் பூதங்களால் கட்டப்பட்ட கோவில். அப்பர் பெருமானின் பாடலைக் கொண்ட ஸ்தலம். தேவார காலத்தில் அண்ணன்வாயில் எனப் பெயர் கொண்டிருந்த இவ்வாலயம் அந்நிய படையெடுப்பின் போது சிறிய ஆலயமாக இடம் பெயர்ந்ததாம்.
அர்ச்சகர் ஒருவருக்கு நடக்கவிருந்த திருமணத்திற்கு முன்பாக பெண் குழந்தை ஒன்று இறந்துவிட்டதால் கொண்ட தோஷத்தைப் போக்கிக் கொள்ள, பௌர்ணமிதோறும் மீனாட்சி அன்னையை வழிபட்டு வந்தார். அவருக்கு புத்ரபாக்யத்தையும் அன்னை அருளியதால் - தென்மேற்கே மீனாட்சி சுந்தரரையும், தெற்கே காசி விஸ்வநாதரையும், வடமேற்கில் முருகனையும் பிரதிஷ்டை செய்ததாக குறிப்பொன்று கூறுகிறது.
ஸ்வாமி சந்நிதானத்தில் குழந்தையை தத்துக் கொடுக்கும் பிரார்த்தனை இத்தலத்தில் பிரசித்தம். அரிசி, வெல்லம், எள் மூன்றையும் கலந்து எடுத்துக் கொண்டு வில்வ மரத்தை சுற்றி வந்து, அதை மரத்தடியில் போட்டு விடுவார்கள். இதை சுற்றிப் போடுதல் என்பர். பின்னர் குழந்தையை தத்து கொடுப்பார்கள். இதனால் குழந்தைகளுக்கு நல்ல ஞானமும் ஆயுள் விருத்தியும் கிடைப்பதாக நம்பிக்கை. விருத்தபுரீஸ்வரருக்கு மாவிளக்கு போடும் பிரார்த்தனையும் உண்டு.
தேவார வைப்புத்தலம்.