தேவ லோகத்தின் அதிபதியான தேவேந்திரனின் சாபத்தால் முடங்கிப் போன தவ வலிமையை மீண்டும் பெறுவதற்காக, இத்தலத்தில் விஸ்வாமித்ரர் தவம் மேற்கொண்டார். அவரது தவத்தைக் கலைக்க இந்திரன் நிறைய முயற்சிகளை மேற்கொண்டான். ஆனால், எதுவும் பலிக்கவில்லை.
தாடகை எனும் அரக்கி இவரது தவத்திற்கு இடையூறு செய்தமையால், ராம - லக்ஷ்மணர் உதவியுடன் தாடகை வதம் புரிந்து, பின் தவத்தை மீண்டும் தொடர்ந்து, தவ வலிமையைப் பெற்றார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
தாடகையை கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க, இங்கு ராம-லக்ஷ்மணர்கள் நவகலச யாகம் செய்த ஸ்தலம் இது.
இங்குள்ள கிணற்றில் தோண்டினால் கிடைக்கும் சாம்பலை ஆராய்ச்சியாளர்கள் எடுத்துச் சென்று சோதித்துப் பார்த்ததில், அதன் வயது ராமாயண காலத்தது என்று கணக்கிட்டதாக ஒரு குறிப்பு கூறுகிறது.
தில்லை என்ற ஊரிலிருந்து கருடனால் கொண்டு வரப்பட்ட தில்லை மரங்களையும், தனி சந்நிதியில் கோவில் கொண்ட தில்லைக் காளியையும் கோவிலின் முன்பாக உள்ள நதிக்கரையில் காணலாம். கிழக்கு நோக்கி தரிசனம் தரும் தில்லைக் காளி மிகுந்த வரப்பிரசாதி என்பர்.