வீரம் நிறைந்த உன்னத செயல்களைப் புரிந்த சிவபெருமானை வீரட்டகாசர் அல்லது வீரட்டேஸ்வரர் என்றும், அவ்வாறு வீரம் புரிந்த பின் வீற்றிருக்கும் இடங்களை வீரஸ்தானம் அல்லது வீரட்டானம் என்றும் அழைப்பார்கள்.
தாரகாசூரனின் மூன்று குமாரர்களான வித்யுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் ஆகிய மூவரும் அவர்களது தந்தையின் மறைவுக்குப் பிறகு, கடுந் தவம் புரிந்தனர். அவர்களது தவத்தால் மகிழ்ச்சி கொண்ட பிரம்மன் பிரத்யட்சமாகி, வேண்டும் வரங்களைக் கேட்டார்.
இறவா வரத்தைக் கேட்டனர். பிறந்தவர்கள் அனைவரும் இறந்தே தீர வேண்டும் என நியதி இருப்பதால், அந்த வரத்தைத் தர பிரம்மதேவர் மறுத்து விட்டார்.
அளவற்ற செல்வங்களுடன் கூடிய பறக்கும் கோட்டைகளை மூவருக்கும் தருமாறும், அந்தக் கோட்டைகள் விண்ணில் பறந்து கொண்டிருக்கும்போது, ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு இடத்தில் ஒன்றாகச் சந்திக்கும் வேளையில், அனைத்து தேவர்களின் சக்தியில் பாதியை தன்னுள் தாங்கும் வல்லமை படைத்த ஒருவனால் மட்டுமே அந்தக் கோட்டைகளை தகர்த்து, இவர்களுக்கு அழிவை உண்டாக்க வேண்டும் என்பதாக வரம் கேட்டுப் பெற்றனர்.
பொன், வெள்ளி, இரும்பு ஆகிய மூன்று கோட்டைகளில் ஆகாயத்தில் பறந்து கொண்டு பார்க்கும் அனைவரையும் இம்சித்து வந்தனர். இவர்களது அட்டகாசம் தாங்க முடியாமல் துன்புற்ற அனைவரும் சிவபெருமானிடம் சரண் அடைந்தனர்.
அவர்கள் பெற்ற வரத்தின்படியே, அவர்களை அழிக்கப் புறப்பட்டார் சிவபெருமான். அனைத்து தேவர்களின் சக்தியையும், பலத்தையும் பாதி தருமாறு கேட்டுப் பெற்று போருக்குப் புறப்பட்டார்.
விஸ்வகர்மாவை வரவழைத்து விசித்ரமான தேர் ஒன்றினை வடிவமைத்து செய்யப் பணித்தார். சூரிய-சந்திரர்கள் தேர் சக்கரங்களாகவும், பருவங்கள் தேர்க் கால்களாகவும், வேதங்கள் குதிரைகளாகவும், பிரம்ம தேவன் சாரதியாகவும், ஓம் எனும் பிரணவ மந்திரத்தைச் சாட்டையாகக் கொண்டும் புறப்பட்டது தேர்.
மேரு மலையை வில்லாகவும், வாசுகியை நாணாகவும் கொண்டு புறப்பட்ட சிவபெருமானின் கரங்களில் திருமால் அம்பாகத் திகழ்ந்தார்.
முப்புரங்களில் சுற்றிப் பறந்த மூவரும், ஓராயிரம் ஆண்டுகள் முடித்து, மூன்று கோட்டைகளும் வானில் ஓரிடத்தில் ஒன்றாகச் சந்திக்கும் வேளை நெருங்கியது. அபிஜித் முகூர்த்த வேளையாகவும் அவர்களை அழிக்க உகந்த வேளையாகவும் இருந்தது.
சிவபெருமான் முப்புரங்களைப் பார்த்து புன்னகை செய்தார். மூன்றும் பற்றிக்கொண்டு எரிந்தன. பிறகு, அவர்கள் பெற்றிருந்த வரத்திற்காக அம்பை எய்தார். முப்புரங்களும் வெந்து சாம்பலாயின எனப் புராண வரலாறு.
மருள்நீக்கியார் என்பவருக்கு திருநாவுக்கரசர் என்று இறைவன் பெயர் சூட்டிய தலம். திருநாவுக்கரசரின் சூலை நோயைக் குணப்படுத்திய இடம். திருஞானசம்பந்தருக்கு நடனக்கோலம் காட்டியருளிய தலம். சுந்தரருக்கு திருவடி தீட்சை தந்தது நிகழ்ந்த தலம்.
தேவாரத் திருத்தலம் - அஷ்ட வீரட்டானங்களுள் ஒன்று.