சப்த ரிஷிகளின் கோபத்திற்காளான அக்னி பகவான், அவர்களின் சாபம் கொண்டு, தனது ஒளியை இழந்ததனால் சாப விமோசனம் வேண்டி பூலோகம் வந்து, இவ்வாலயத்து வன்னிமரத்தடியில் சுயம்புவாக எழுந்தருளியிருந்த வன்னியப்பரை வழிபட்டு வந்தார். இவ்வாலயத்து தீர்த்தக்குளத்தில் தினமும் ஸ்நானம் செய்து வன்னியப்பரை பூஜித்து வந்தார். இதனால் இழந்த ஒளியை மீண்டும் பெற்று பிரகாசமானார் என ஸ்தல வரலாறு.
ஒரு சமயம் தேவர்களுக்கு அஞ்சிய அக்னி பகவான் இங்குள்ள தீர்த்தத்தில் ஒளிந்து கொண்டாராம். தேவர்களும் இவர் ஒளிந்திருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தனர். யாகங்களில் அளிக்கப்படும் அவிர்பாகத்தை உரியவர்களுக்கு கொண்டு போய் சேர்க்கும் பணியை இவரிடம் ஒப்படைத்தனர். பின்னர் தேவர்களுள் ஒருவரானார் என ஸ்தல புராணம் மேலும் விவரிக்கின்றது.