மேலமலை, கடம்பர் மலை, உவச்சன் மலை, பாறையன் மலை, மண் மலை, பொன்மலை, ஆளுருட்டி மலை, பொம்மன் மலை ஆகிய எட்டு குன்றுகள், ஒன்றொடொன்று நெருங்கி இணைந்திருக்கும் மலைத்தொடரே நார்த்தமலைத் தொடர். இம்மலைக் குன்றுகளில் தளவா சுனை, ததும்பு சுனை, ஏழு சுனை, இரட்டை சுனை, மேலச்சுனை, அருண் சுனை, புலி குடிக்கும் சுனை, நவக்சுனை, மஞ்சள்சுனை ஆகிய சுனைகள் உள்ளன.
ஆளுருட்டி மலை ஒரு நீண்ட கற்பாறை. ஆழமான சரிவும் கிடுகிடு பள்ளமும் கொண்டுள்ளது. குற்றங்கள் பல புரிந்தவரை, இதிலிருந்து உருட்டி விடுவது வழக்கமாம்.
நாரதர் மலை என்பதே மருவி நார்த்தாமலை என்றானதாக கூறப்படுகிறது. நகரத்தார் எனும் வணிகர்கள் இங்கு வசித்தபோது கோவில் நிர்வாகத்தை கவனித்துக்கொண்டிருந்தனர் என்றும் அவர்களின் பெயரால் நகரத்தார் மலை என அழைக்கப்பட்டு பின்னர் மருவி நார்த்தாமலை என்றானதாக கூறப்படுவதுண்டு.
சஞ்சீவி மலையை ஹனுமன் எடுத்துச் சென்றபோது, அதனின்று பெயர்ந்து விழுந்த சிறு துண்டுகளே இந்த மலைக் குன்றுகள் என ஸ்தல வரலாறு.
தஞ்சை பெரிய கோவில் கட்டுவதற்கு தேவையான பாறாங்கற்களை நார்த்தாமலையிலிருந்து கொண்டு வரச் செய்தார் ராஜராஜ சோழன் என வரலாறு.