பாற்கடலைக் கடைந்து அமுதம் பெற்ற தேவர்கள், அதை ஒரு குடத்தில் நிரப்பிக்கொண்டு செல்லும் வழியில், ஒரு குளக்கரையில் குடத்தை வைத்துவிட்டு நீராடச் சென்றனர். நீராடி முடித்து பின்னர் அதை எடுக்க முற்பட்டபோது, குடம் பூமியில் பதிந்துவிட்டது. குடத்துக்குள்ளிருந்த அமுதம் லிங்கமாக உருப்பெற்று, பூமியில் ஸ்தாபனமாகிவிட்டது. அமுதத்திலிருந்து தோன்றிய ஈஸ்வரன் அமிர்தகடேஸ்வரர் எனும் திருநாமம் கொண்டார்.
கடம் வைத்த இடமாதலால் கடவூர் எனப் பெயர் கொண்டது. ஊழிக் காலத்தைக் கடந்து நிற்பதாலும், கால பயத்தைக் கடக்க உதவுவதாலும் கடவூர் எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர். யம வாதனையைக் கடத்தற்குரிய ஊர் என்பதாலும் கடவூர் எனப்படுவதாகக் கூறுவர்.
கௌசிக முனிவரின் புதல்வனான ம்ருகண்டு முனிவரும் அவரது மனைவி மருத்துவதியும், புத்திரபாக்கியம் வேண்டி தவமிருந்தனர். பிரம்மனின் கணக்குப்படி 16 வயது வரை மட்டுமே வாழக்கூடிய புத்திரனைப் பெற்றனர். மார்க்கண்டேயன் எனப் பெயர் சூட்டினர். குழந்தை வளர்ந்து சிவபெருமானின் பக்தனாக இருந்தான். 16 வயது பூர்த்தியாகும் தருணத்தில் அவன் உயிரைக் கவர யமன் வந்தான்.
ஸ்ரீ சந்திரசேகராஷ்டகம் பாடிக் கொண்டே சிவபூஜையில் யமன் பாசத்தை வீசினான்.
மார்க்கண்டேயன் சிவலிங்கத்தைக் கட்டிக்கொண்டான். சிவலிங்கத்துடன் சேர்த்து மார்க்கண்டேயனை இழுத்தது யமனின் பாசக்கயிறு. லிங்கத்திலிருந்து வெளிப்பட்ட சிவபெருமான் யமனைக் காலால் உதைத்துத் தள்ளி சூலத்தால் அழுத்தி நின்றார்.
இவரே கால சம்ஹார மூர்த்தி.
காலத்தை கணக்கிட்டு உயிர்களை எடுத்துச் செல்லும் பதவியில் நியமிக்கப்பட்டிருந்ததால் யமனுக்கு காலன் என்றொரு பெயர். விநாடிக்கு விநாடி இறந்துகொண்டிருப்பது காலம். அந்தக் காலத்தையும் காலனையும் சம்ஹாரம் செய்ததால் இவரைக் கால சம்ஹார மூர்த்தி எனப் போற்றுகின்றனர்.
கால சம்ஹார திருவிழா - 18 நாட்கள் சித்திரை (ஏப்ரல் - மே) மாதத்தில் நடைபெறும். இத்திருவிழாவின் 6ஆம் நாள் அன்று கால சம்ஹார தாண்டவமும், யமனை அழிப்பதும், பின்னர் அருள் புரிவதும் ஐதீகக் காட்சிகளாக நடத்திக் காட்டுவர். அன்றைய தினம் கால சம்ஹாரர், பஞ்ச மூர்த்திகள், மார்க்கண்டேயர் ஆகியோரின் உலாத் திருமேனிகள் உலா வரும் காட்சியைக் காண அனைவரும் திரண்டு வருவர்.
சிவபூஜையிலிருந்தவன் மீது பாசக்கயிறு வீசியது தவறு என்பதை உணர்த்தி, கடமையைச் செய்ய யமன் வந்ததால் அவனை மன்னித்து உயிர்ப்பிச்சை கொடுத்தார். மார்க்கண்டேயனுக்கு சாகாவரமாக என்றும் 16 எனும் வரம் அளித்தார். பின்னர் லிங்கத்திற்குள் மறைந்தார் என ஸ்தல வரலாறு.
ஞான உபதேசம் பெற விரும்பிய பிரம்மனிடம், ஒரு வில்வ விதையைத் தந்து இதை நட்ட ஒரு முகூர்த்தத்திற்குள் எங்கு முளைக்கிறதோ - அங்கு வந்து வழிபட்டு ஞான உபதேசம் பெறுவாயாக என சிவபெருமான் கூறிவிடுகின்றார். அவ்வண்ணமே இத்தலத்தில் நடைபெற்றதால், பிரம்மன் இத்தலத்தில் ஞான உபதேசம் பெற்றார் என வரலாறு. அவ்விறைவனே ஆதிமூர்த்தியான வில்வவனேஸ்வரர்.
தஞ்சையை ஆண்ட அரசர் ஒருவரிடம் அபிராமி பட்டரை ஊர் மக்கள் அறிமுகம் செய்து வைத்தனர். (இயற்பெயர் சுப்ரமண்யர் - சரபோஜி மன்னரே அவருக்கு அபிராமி பட்டர் எனும் பெயர் சூட்டியதாகக் குறிப்பொன்று கூறுகின்றது). அன்று அமாவாசை எத்தனை நாழிகையுள்ளது? என அரசர் கேட்க, அபிராமி பட்டரோ அன்று பௌர்ணமி என்று கூறிவிடுகின்றார்.
தன் பிழையை உணர்ந்த அபிராமி பட்டர் அம்பாள் சந்நிதி சென்று தமது வாக்கை மெய்ப்பிக்கும்படி வேண்டுகிறார். கீழே தீ மூட்டி அதன் மீது உறியைத் தொங்கவிட்டு அதன் மேல் அபிராமி பட்டரை ஏற்றுகிறான் அரசன். தீயின் மீதிருந்தபடியே அந்தாதி பாடுகிறார் பட்டர். தன் பக்தனைக் காப்பாற்ற தனது காதுகளின் தாடங்கத்தை (தோடுகளை) கழற்றி வீசுகிறாள் அபிராமி. பூரண சந்திரன் தோன்றி அமாவாசை தினம் பௌர்ணமியானது.
தை மாத அமாவாசையன்று - அபிராமி தன் காது தோட்டை ஆகாயத்தில் விட்டெறிந்து பூரண சந்திரனை வரவழைத்த காட்சியையும், பட்டர் அந்தாதி பாடும் காட்சியையும் ஐதீகமாக நடத்திக் காட்டுகின்றனர்.
குங்கிலியக் கலய நாயனார் மற்றும் காரி நாயனார் தோன்றிய ஸ்தலம்.
இது ஒரு நித்திய அனுக்ரஹ ஸ்தலமாகக் கருதப்படுகின்றது.
தேவாரத் திருத்தலம் - அஷ்ட வீரட்டானங்களுள் ஒன்று - சக்தி பீடங்களுள் ஒன்று - கால பீடம்
விநாயகரின் அறுபடை வீடுகளுள் மூன்றாவது