பரத முனிவர், வேள்விக்குடியில் கங்கணதாரணம் முடித்த தனது மகளையும், மருமகனையும் தான் குடியிருக்கும் இவ்வூருக்கு வருமாறு கேட்டுக் கொண்டார். இதை ஏற்று வருகை தந்த தம்பதிகளை, பூரண கும்பத்துடன் பிரமாதமான வரவேற்பு கொடுத்து, எதிர்கொண்டு அழைத்தார் பரத முனிவர். இதனால் இவ்வூர் எதிர்கொள்வாடி எனப் பெயர் கொண்டு, நாளடைவில் எதிர்கொள்பாடி என்றானது.
போரில் வெற்றி கொண்ட இந்திரனைப் பாராட்டி, தான் சிவ பூஜை செய்து வைத்திருந்த மலரினைப் பரிசாகக் கொடுக்கின்றார் துர்வாச முனிவர். அதனுடைய அருமை தெரியாமல் அலட்சியமாக அதனைப் பெற்று, தான் உட்கார்ந்திருந்த ஐராவதத்தின் (யானையின்) தலை மீது வைக்கிறான் இந்திரன். ஐராவதமோ அதைத் தூக்கித் தரையில் எறிந்து தன் காலால் மிதித்தது.
இதைக் கண்ணுற்ற துர்வாசர் கோபம் கொண்டு சபிக்கின்றார். சாபம் கொண்ட இந்திரன் தனது பதவி, பொன், பொருள் யாவும் இழக்கிறான். ஐராவதமான யானை தனது சிறப்புகளை இழந்து பூமிக்கு வந்து அலைந்து திரிகின்றது.
இத்தலத்திற்கு வந்து இவ்விறைவனை வழிபட்டு தனது சாபத்தைப் போக்கிக் கொண்டது ஐராவதம். இதனால் இறைவன் ஐராவதேஸ்வரர் எனும் திருநாமம் கொண்டார். இவரை வழிபட்ட இந்திரன், தனது இழந்த செல்வங்களை மீண்டும் பெற்றான்.
தேவாரத் திருத்தலம்.