தேர் வடிவில் அமைக்கப்பட்ட சிவாலயங்களை கரக்கோவில் என்று கூறுவார்கள். கடம்பூர் கரக்கோவில் என்று இந்தக் கோவிலை அழைக்கின்றனர்.
பாற்கடலைக் கடைந்து, தேவர்கள் அமிர்தம் பெற முற்பட்டபோது, விநாயகரை வணங்காமல் ஆரம்பித்ததால், அமிர்த கலசத்தை பிள்ளையார் பூலோகத்தில் மறைத்து வைத்து விட்டார். இந்த நிகழ்வின்போது சிந்திய ஒரு துளி அமிர்தமே, இங்கு சுயம்புவாக எழுந்தருளியுள்ள சிவலிங்க ஸ்வரூபம். இதனால் இறைவன் அமிர்தகடேஸ்வரர் என்ற திருநாமத்தைக் கொண்டார்.
இந்திரனின் தாயார் இங்கு சிவபெருமானை வழிபட்டு வந்தார் எனக் கூறப்படுகின்றது. இதனால் தினமும் ஒரு காலம் சிவபெருமானுக்கு பட்டுப் பட்டாடை சாத்துகிறார்கள். அந்த நேரத்தில் தரிசிப்பது விசேஷம்.
அமிர்தகடேஸ்வரரை விண்ணுலகம் எடுத்து செல்ல முயன்ற தேவேந்திரன், விநாயகரை வணங்காது குதிரைகள் பூட்டிய தேருடன் சிவலிங்கத்தைக் கட்டி இழுத்தான். விநாயகர் தன் பெரு விரலால் தேர் சக்கரத்தை அழுத்திட, தேர் சக்கரம் நிலத்தில் புதையுண்டது. ஒரு பக்க கல் சக்கரங்கள் பூமியில் ஆழ்ந்தும், மறு பக்கம் தரையிலிருந்து மேலாக தூக்கியும் காணப்படுவது அதிசயமான ஒன்று. பின்னர் இந்திரன் தனது கரத்தால் அகழ்ந்து கொண்டு போக எத்தனித்தான். இதனால் கரக்கோவில் எனப் பெயருற்றது. பிராயச்சித்தமாக இளங்கோவில் ஒன்றினை அமைத்து ருத்ர கோடீஸ்வரரை பிரதிஷ்டை செய்து வழிபட்டான் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
கோவிலின் தென்மேற்கு மூலையில் அமர்ந்துள்ளார் இந்திரனை சோதித்த ஆரவார விநாயகர். வாதாபி கோட்டை கணபதி என்பர். ராஜேந்திர சோழன் வாதாபியிலிருந்து கொண்டு வந்த இரண்டு விநாயகர்களில் ஒன்று திருசெங்காட்டான்குடியிலும், மற்றொன்று இத்தலத்திலும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பொன்று தெரிவிக்கின்றது.
கணங்கள் பூஜித்த ஸ்தலம். சூரபத்மனை அழித்திட முருகன் வில்லினை பெற்ற ஸ்தலம்.
தேவாரத் திருத்தலம்.