இறைவனை மீண்டும் ஒருமுறை மாப்பிள்ளை கோலத்தில் கண்டு அவரை மணக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை கோரிக்கையாக முன் வைக்கிறாள் அம்பிகை. அதற்கு கால தாமதம் ஆகும், பொறுத்திரு என்கிறார் இறைவன்.
இதனால் வருத்தமுற்ற தேவி, இறைவனிடம் சற்று அலட்சியமாக நடந்து கொண்டாள்.
அவளை சோதிக்க எண்ணிய சிவபெருமான், பொய்க் கோபம் கொள்வதான பாவனையில், தேவியைப் பசுவாக உரு மாறி பூவுலகில் சுற்றித் திரியும்படி சபிக்கிறார்.
சாபத்தினால் பசு வடிவம் கொண்ட அம்பிகை தனது பயணத்தை தேரெழுந்தூரில் தொடங்கி, ஊர் ஊராகச் சென்று, திருவாவடுதுறையில் சுய உருவம் பெற்று, திருத்துருத்தியில் பரத மகரிஷியின் யாகக் குண்டத்திலிருந்து பெண்ணாக வெளிப்பட்டு, வேள்விக்குடியில் கங்கண தாரணம் கட்டிக் கொண்டு, குறுமுளைப்பாடியில் பாலிகை ஸ்தாபனம் செய்து, திருமணஞ்சேரியில் பூலோக முறைப்படி சாஸ்திர சம்பிரதாயப்படி இறைவனை மணந்து தன்னுடைய விருப்பத்தைப் பூர்த்தி செய்து கொள்கிறாள் என ஸ்தல வரலாறு.
திருமணஞ்சேரிக்கு வந்து ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரரையும் உமையவளையும் வழிபடுவோர்க்கு திருமணத் தடை நீங்கி சீக்கிரம் திருமணம் நடக்கும் மற்றும் குழந்தை இல்லாதவர்களுக்குப் புத்திரப் பிராப்தி உண்டாகும்.
ராஜ குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண்மணிகள், தங்களுக்குப் பெண்ணும் பிள்ளையும் பிறந்தால் சம்பந்தம் செய்து கொள்வதாக நிச்சயித்து, இவ்விறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டனர். இறைவனருளால் நிச்சயமாகக் குழந்தை பிறக்கும் என ஒருவளும், குழந்தை பிறந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்ற அவநம்பிக்கையுடன் மற்றவளும் வீடு திரும்பினர்.
முதல் பெண்ணுக்குப் பெண் குழந்தையும், இரண்டாமவளுக்கு ஆமையும் பிறந்தன. இருவருமாக இறைவன் சந்நிதானத்திற்கு வந்து பிழையைப் பொறுத்து மன்னித்தருளுமாறு வேண்டுகின்றனர். திருக்குளத்தில் ஆமையை மூழ்குமாறு பணிக்கிறார் இறைவன். இறைவனருளால் ஆமை வாலிபனாக மாறியது. திருமணமும் நிச்சயித்தபடி இனிதாக நடந்தது.
சிவபெருமானின் கோபத்திற்கு ஆளாகி கொற்கையில் எரிந்து போன மன்மதன், இத்தலத்தில் இவ்விறைவனை வழிபட்டு அருள் பெற்றார் என வரலாறு.
சித்திரை மாத பூச நட்சத்திர நாளில் திருக்கல்யாண உற்சவம் தொடங்கி மூன்று நாட்களுக்கு விமரிசையாக நடக்கும். ஊரே விழாக் கோலம் பூண்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடும்.
இறைவனின் திருமணத்திற்கு மாலைகளாக வந்த ஏழு கடல்களும் இங்கேயே தங்கி விட்டன. 'சப்த சாகரம்' என்ற பெயரில் இங்கு தீர்த்தமாக உள்ளன.
தேவாரத்திருத்தலம்