இந்திரத்யும்னன் என்ற அரசன், அகஸ்தியரை அவமதித்ததால் அவரின் சாபம் பெற்று காட்டு யானையாக மாறி, கஜேந்திரன் என்ற பெயரில் திரிகூடமலை காட்டுப் பகுதியில் சாப விமோசனம் வேண்டி திரிந்து கொண்டிருந்தான்.
ஹுஹு என்ற கந்தர்வன், நதியில் ஸ்நானம் செய்ய வந்த கபில முனிவரின் காலைப் பிடித்து இழுத்து விளையாடி குறும்பு செய்ததால், கோபம் கொண்ட கபில முனிவர் அவனை முதலையாக மாறுமாறு சாபம் கொடுத்தார்.
திரிகூடமலை காட்டுப் பகுதியில் உள்ள தீர்த்தத்தில், சாப விமோசனத்திற்காகக் காத்திருந்தது முதலை.
இந்த தீர்த்தத்தில் பூத்திருக்கும் தாமரை மலர்களை தினமும் பறித்துக் கொண்டு போய், திருமாலுக்குப் பூஜை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தது கஜேந்திர யானை. ஒரு நாள் பூ பறித்துக் கொண்டிருந்த யானையின் பின்னங்காலை முதலை பிடித்துக் கொண்டது.
"ஆதிமூலமே! இந்த முதலையின் பிடியிலிருந்து என்னைக் காப்பாற்றி, இந்த மலரைப் பூஜைக்கு ஏற்றுக் கொண்டு எனக்கு ஆசி வழங்குங்கள்" என அலறியது யானை. யானையின் துயரைத் துடைக்க கருட வாகனத்தில் பறந்து வந்த திருமால், சக்ராயுதத்தால் முதலையைக் கொன்றார். இதன் மூலம் முதலைக்கும் சாப விமோசனம் கிடைத்தது. கஜேந்திர யானைக்கும் வைகுந்த பதவி கிடைத்தது என ஸ்தல வரலாறு கூறுகிறது.
கஜேந்திர மோட்சம் எனும் நிகழ்வு நடந்த இந்த தீர்த்தத்தைச் சக்கர தீர்த்தம் என்பார்கள்.
அத்தி - ஆள - நல்லூர் என்பதே அத்தாளநல்லூர் என மருவியது. அத்தாளம் என்றால் இரவு உணவு. பசியில் வரும் வழிப்போக்கர்களுக்கு இரவு உணவு வழங்கும் ஊர் என்பதால் இந்தப் பெயரைக் கொண்டதாகச் சிலர் கூறுவர்.
108 திவ்ய தேசங்களுள் ஒன்று - பூலோக வைகுண்டம்.