மூலவர்: ஜெயங்கொண்ட சோழீஸ்வரர்் அம்பாள்: சௌந்தர நாயகி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக ஜெயங்கொண்ட சோழீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். வட்டமான வடிவம் கொண்ட ஆவுடையார் மீது அழகிய பாணம் அமர்ந்துள்ளது. தெற்கு நோக்கிய தனி சந்நிதியில் அம்பாள் சௌந்தர நாயகி எனப்படும் அழகம்மை எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள்.
மஹாமண்டபத்துள் பிள்ளையார், முருகன், கஜலட்சுமி, ரிஷபாரூடர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
உருவமாக இல்லாமல் அரூபமாக காளி எழுந்தருளியுள்ளார். பீடம், சூலம், வேல், வாள் ஆகியனவற்றை வைத்து வணங்குகின்றனர். காளி தேவிக்கு உக்ரம் அதிகம் என்பதால், அந்த உக்ரத்தைத் தணிக்க ஸ்ரீ பைரவரை எதிரில் ஸ்தாபித்துள்ளனர்.
காவல் தெய்வமான இக்காளிக்கு, சிவராத்திரியன்று நவதான்யங்களை வேகவைத்து படைத்து வழிபடுகின்றனர். இதனை 'பச்சிலை பரப்புதல்' என்பர். இங்கு எழுந்தருளியுள்ள கால சம்ஹார மூர்த்தி கொள்ளை அழகுடன் காணப்படுகின்றார்.
திருச்சுற்று பிரகாரத்தில் அமைந்துள்ள தூண்கள் சிற்ப வேலைப்பாட்டிற்குப் பெயர் பெற்றவை. மரப்பலகைகளை செதுக்கி அடுக்கியது போன்ற மேல் விதானக் கூரை, ஆவுடையார் கோவில் கொடுங்கையை நினைவுபடுத்துகிறது. விதானத்தில் சிவபுராண நிகழ்வுகளை சித்தரித்துள்ளனர். ராசி சக்கரம் வரையப்பட்டுள்ளது. விநாயகர் ஆவுடையில் இருப்பது வித்தியாசமான அழகு.
இக்கோவிலின் விமானம் புகழ் பெற்றது. சிவன்-பார்வதியை கிழக்கிலும், விஷ்ணு - முருகன் மற்றும் தட்சிணாமூர்த்தியை தெற்கேயும், ராம - லக்ஷ்மண - சீதை மற்றும் கிருஷ்ணனை மேற்கேயும், பிரம்மாவை வடக்கேயுமாக வடிவமைத்து உருவாக்கியுள்ளனர்.