கொப்பு எனும் காதணியை அணிந்தவள் என்பதால் கொப்புடை நாயகி எனும் பெயர் பெற்றாள் என்பர். உற்சவரே மூலவராக தரிசனம் தருவது இத்தலத்தின் விசேஷமாகும்.
இவ்வூருக்கு அருகேயுள்ள சங்கராபுரத்திலுள்ள காவல் தெய்வமான காட்டம்மனின் சகோதரியே இந்த கொப்புடையாள். சகோதரியின் குழந்தைகளிடத்து அளவற்ற அன்பை வைத்திருந்தாள் கொப்புடையாள் என்றும், இதனால் தன்னிடத்து குழந்தைகள் பாசமில்லாது போய்விடுமோ என்ற பயத்தில் காட்டம்மன் கொப்புடையாளை குழந்தைகளிடமிருந்து பிரித்தாள் என்றும், அந்த ஏக்கத்தில் இவள் தனிமையானாள் என்றும் செவிவழி கதை ஒன்று நிலவுகிறது.
சங்கராபுரத்தை ஆண்ட சிற்றரசன் காட்டம்மனிடம் மிகுந்த பக்தி கொண்டவன். அந்நியர் படையெடுத்த சமயத்தில் காட்டம்மனை ஒரு வேப்ப மர பொந்தில் ஒளித்து வைத்திருந்து, பின்னர் நம்பகமான ஒருவரிடம் ஒப்படைத்து பாதுகாக்க வேண்டினான் என்றும், இப்படி ஒப்படைத்ததால் ஒப்புடைநாயகி எனப் பெயர்பெற்று, பின்னர் மருவி கொப்புடைநாயகி என்றானதாகவும் கூறப்படுவதுண்டு.
ஆதியில் இப்பகுதி முழுவதும் காரைச் செடிகள் மிகுந்து காடு போல் இருந்ததாகவும், அவற்றை அழித்து நிர்மாணிக்கப்பட்ட நகரம் என்பதால் காரைக்குடி எனப் பெயர் கொண்டதாகவும் கூறுவர்.