ஸ்தல வரலாறு:
இறுமாப்பாய் கயிலைக்குள் போக எத்தனித்த இந்திரனை, பூத வடிவில் அவன் முன் தோன்றி தடுத்தார். குலிசத்தை பூதத்தின் மீது எறிந்தான்.
இதனால் கோபம் கொண்ட சிவபெருமானை புரிந்து கொண்ட இந்திரன் தனது குற்றத்தைப் பொறுத்தருள வேண்டினான்.
இந்திரஜித் புஷ்பக விமானத்தில் பறந்து கொண்டிருந்தபோது பயணம் தடைபட்டது. என்னவென்று பார்த்ததில் கீழே சிவாலயம் இருப்பது கண்டு, கீழே இறங்கி, இவ்விறைவனை வழிபட்டான். இவரது மஹிமையை தெரிந்து கொண்டதால், லிங்கத்தை பெயர்த்து எடுத்துக்கொண்டு இலங்கை செல்ல முற்பட்டான்.
ஆனால் முடியவில்லை. தனது மகனின் குற்றத்தைப் பொறுத்தருளுமாறு ராவணன் வேண்டியதால் குற்றத்தைப் பொறுத்தருளினார்.
தான் லிங்கம் கொண்டு வருவதற்குள், சீதா தேவி லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து விட்டாள் என அறிந்து அந்த லிங்கத்தை தன் வாலால் கட்டி இழுத்து சிவஅபராதம் தேடிக் கொண்டு வால் அறுபட்ட ஹனுமன், இங்குள்ள மூலவரை வழிபட்டு தன் குற்றத்தைப் பொறுத்தருள வேண்டினார்.
இப்பவும் மூலஸ்தானத்திற்கு வந்து வழிபடுவதாக அர்ச்சகர் தெரிவிக்கின்றார்.
சூரிய பகவான் வழிபட்டதால் தலைஞாயிறு என்றும் பாஸ்கர க்ஷேத்ரம் என்றும் போற்றுகின்றனர்.
இவ்விறைவனை வழிபடுபவர்கள் அடுத்த ஜென்மம் தாயின் கருவில் தங்க மாட்டார்கள். அதாவது மறு ஜென்மம் கிடையாது என்பர். அதனால் கருப்பறியலூர் எனப் பெயர் பெற்றது. மலைக்கோயில் மேலேறி உமா-மகேஸ்வரரையும், சட்டநாதரையும் தரிசிப்பது சீர்காழியை நினைவு படுத்துவதால் இவ்வுரை மேலைக்காழி என்பார்கள்.
விசித்ராங்கன் எனும் அரசன் தன் மனைவி சுசீலையுடன் இத்தலம் வந்து இவ்விறைவனை வழிபட்டு புத்ரபாக்யம் வேண்டி நின்றான். இறைவன் அருளால் குழந்தையும் பிறந்தது. நன்றிக்கடனாக இந்த ஆலயத்தை கட்டினான் எனக் கூறப்படுகின்றது.
வசிஷ்ட மகரிஷி வழிபட்ட ஸ்தலம். இங்கு செய்யும் நல்ல காரியங்கள் ஒன்றுக்கு பத்தாக பெருகும் என ஐதீகம். இங்குள்ள தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்தால் தோஷங்கள் விலகி புத்ர பாக்யம் கிடைப்பதாக நம்புகின்றனர்.
கொகுடி முல்லை படரும் மரமும் - லிங்கமும் பிரகாரத்திலுள்ளது.
இதனால் கொகுடிக் கோயில் என்றும் கூறுவர். திருவாதிரையில் ஸ்வாமி புறப்பாடு நடக்கும்.
சப்த பாஸ்கர க்ஷேத்ரங்களுள் ஒன்று எனப் போற்றப்படுகிறது.