இத்தலத்திலுள்ள புளிய மரத்தடியில் சிவலிங்கம் ஒன்றை மணலால் பிடித்து உருவாக்கினார் அகஸ்தியர். மரத்து மேலிருந்த தேன் கூட்டிலிருந்து தேன் வழிந்து, புளிய இலை வழியாக லிங்கத்தின் மீது சொட்டு சொட்டாக வீழ்ந்து அபிஷேகம் செய்தது. இதனால் மணல் லிங்கம் இறுகி கல் போல் ஆனது.
இலை வழியாக தேன் சொட்டியதால் இவ்வூர் இலையத்தூர் எனப் பெயர் கொண்டது. தேன் சிவலிங்கத்தின் மீது சொட்டியதால் இவ்விறைவனுக்கு மதுநாதர் எனப் பெயர் வந்தது.
ராம - லக்ஷ்மண - வானர சேனைகளின் தாகத்தை தீர்ப்பதற்காக ராமநாமம் ஜபித்தபடி ஹனுமன் தன் கதையால் ஒரு பாறையை பிளக்க அதிலிருந்து பெருகி ஓடி வந்த நீரை ஹனுமன் நதி என்கின்றனர். வற்றாத கேணி ஒன்றும் உள்ளது. இதில் தேன்சுவை கொண்ட தண்ணீரும் அடியில் மண்ணுக்கு மாற்றாக மணலும் இருக்கின்றது.