நைமிசாரண்யத்து முனிவர்கள், தவம் மேற்கொள்ள, இடையூறு இல்லாத இடமாக தேடி அலைந்து, இத்தலத்தை தேர்வு செய்து பறவைகள் வடிவத்தில் இருந்து கொண்டு தவம் செய்தனர். பறவைகளை வேடர்கள் துன்புறுத்தலாயினர். இதனால் பறவைகள் வடிவத்திலிருந்த முனிவர்கள், தாங்கள் நிரந்தரமாக தங்கி, தவம் இருக்க உதவி செய்யுமாறு இறைவனை வேண்டினார்கள்.
இறைவன் அவர்களை எருக்கஞ்செடிகளாக மாற்றி விட்டார். எருக்கஞ்செடி ரூபத்தில் தவமிருந்து, முக்தி பெற்றனர் என ஸ்தல வரலாறு. எருக்கஞ்செடிகளாக இருந்து முனிவர்கள் வழிபட்டதாலும், புலிக்கால் முனிவர் வியாக்ரபாதர் பூஜித்து வழிபட்டதாலும் எருக்கத்தம்புலியூர் எனப் பெயர் கொண்டது.
எருக்கமர நிழலில் லிங்கம் அமைத்து, வியாக்ரபாதர் வழிபட்டதாக வரலாறு. பிள்ளைப்பேறு வேண்டி தவமிருந்த ஒருவரை புலி ஒன்று கொல்ல முற்பட்டது. இதை கண்ணுற்ற வேடன் ஒருவன், இவ்விறைவனை வேண்டியபடி அம்பு ஒன்றை எடுத்து, ஏவினான். சீறிப் பாய்ந்த அம்பு, புலியைக் கொன்று அடியாரைக் காப்பாற்றியதாக ஸ்தல வரலாறு.
அந்த அம்பு திருவோண நட்சத்திரமானது. வேடன் மறு பிறவியில் புலிக்கால் முனிவரானார்.
வேதங்களின் தாத்பரியத்தை சிவபெருமான் உபதேசித்துக் கொண்டிருக்கையில் உமையவளின் கவனம் சிதறியதால் கோபம் கொண்ட இறைவன் உமையவளை மீனவப் பெண்ணாக பிறந்து பூமியில் உழலும்படி சபித்து விடுகிறார். தனது தாயின் சாபத்திற்கு காரணமான வேதங்களை தூக்கி முருகன் கடலில் வீசி விடுகிறார். இதனால் சாபம் கொண்டு ஊமையாக பூமியில் பிறந்து மதுரையில் உருத்திரசர்மன் என்ற பெயரில் வளர்ந்து வருகிறார். சாப விமோசனம் வேண்டி பல ஸ்தலங்களுக்குச் சென்று பின் இத்தலத்திற்கு வந்த உருத்திரசர்மன் வழிபட்டு தனது ஊமைத்தன்மையை போக்கிக் கொண்டதாக ஸ்தல வரலாறு.
ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திரன் புனர்நிர்மாணம் செய்ததால், ராஜேந்திர பட்டினம் என அழைக்கின்றனர்.
தேவாரத்திருத்தலம் - ஐந்து புலியூர்களில் ஒன்று