சிவநேசர் - ஞானகலாம்பிகை தம்பதியினர் பெற்றெடுத்த பிள்ளைக்கு திருவெண்காடர் எனப் பெயர் சூட்டி வளர்த்து வந்தனர். திருவெண்காடர் கடல் கடந்து வாணிபம் செய்து வந்தார். அவரது மனைவியின் பெயர் சிவகலை. குழந்தை இல்லை.
இவ்வூரைச் சேர்ந்த சிவசருமர் - சுசீலை எனும் பரம ஏழைத் தம்பதியினருக்கு சிவபெருமானே மகனாகப் பிறந்தார். மருதவாணன் எனப் பெயரிட்டு வளர்த்துவந்தனர். இவர்களது கனவில் தோன்றிய சிவபெருமான், மருதவாணனை திருவெண்காடருக்கு தத்துக் கொடுத்து விடும்படிக் கூறினார்.
திருவெண்காடர் செய்து வந்த வாணிபத்தை மருதவாணன் செய்து வரலானார். ஒரு நாள் வாணிபம் முடித்து திரும்பி வந்த மருதவாணன், திருவெண்காடரிடம் ஒரு பெட்டியைத் தந்தார். அதில் தவிடு மட்டுமே இருந்தது. "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே" என எழுதியிருந்தது.
இதைப் படித்த திருவெண்காடருக்கு ஞானம் பிறந்தது. துறவியானார். அவரே பட்டினத்தார். முக்தி பெற வேண்டி ஸ்தல யாத்திரை மேற்கொண்டார். திருவொற்றியூரில் முக்தியானார் என ஸ்தல வரலாறு.
இயற்பகை நாயனாரும், பட்டினத்தாரும் அவதரித்த ஸ்தலம். காலவ மகரிஷி வழிபட்ட ஸ்தலம். இவ்வூரின் அருகே காவிரி ஆறு வங்காள விரிகுடாக் கடலில் கலக்கின்றது.
கோவிலின் முன்பாக ஜானவி தீர்த்தக் குளம் உள்ளது.
தேவாரத்திருத்தலம்.