ஒரு சாபத்தினால் பூலோகத்திற்கு வந்து காரி மன்னனாக அரசாண்டு வந்த இந்திரன், களாமரத்தடியில் சுயம்புவாக எழுந்தருளியிருக்கும் சிவலிங்கத்திற்கு வேலி அமைத்து வழிபட்டு வந்தான். நள்ளிரவில் ஒரு யானை வேலியைப் பிரித்துப் போட்டு உள்ளே வந்தது. உள்ளே வந்த யானை சிவலிங்கத்தைச் சுற்றிச் சுற்றி வந்து வழிபட்டது. மறு நாள் வந்து பார்த்த காரி மன்னன் வேலி பிரித்திருப்பது கண்டு மீண்டும் வேலியை அமைத்தான். மீண்டும் யானை அதைப் பிரித்து உள்ளே நுழைந்து சிவலிங்கத்தை வழிபட்டது. இப்படியாகத் தொடர்ந்ததில் சிவபெருமான் யானைக்கும், மன்னனுக்கும் காட்சி தந்தார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
காட்டு யானை ஒன்று வேலிக்குள் வந்து சிவலிங்கத்தை வலம் வந்து வழிபட்டதால் இவ்வூருக்கு கரி வலம் வந்த நல்லூர் எனப் பெயர் வந்தது.
கருணையம்பலம் என்றும் அழைப்பார்கள். சுக்கிரனுக்கு பால் வண்ணத்தில் காட்சி தந்ததால் பால் வண்ண நாதர் என்ற திருநாமத்தைக் கொண்டார்.