நினைத்த நேரத்தில் நினைத்த ஸ்தலத்திற்கு சென்று சிவதரிசனம் செய்துவிட்டு திரும்பும் யோக வல்லமையுடையவர் ஆனந்த முனிவர். நித்ய சிவதரிசனத்தை முடித்துக் கொண்டு இரவுப் பொழுதைக் கழிக்க தன்னுடைய ஊரான ஆனதாண்டபுரத்திற்கு வந்து விடுவார்.
இவரை சோதிக்க எண்ணிய இறைவன் பெருமழையை பெய்ய வைத்து இவ்வூரை விட்டு அவர் நகரமுடியாமல் செய்து விட்டார். இரவு வரை மழை தொடர்ந்து பெய்ததால் சிவதரிசனம் செய்ய முடியாது போனது. இதனால் மனம் வருந்திய முனிவர் தனது உயிரை துறக்க முற்பட்டார். அவர்முன் பிரத்யட்சமான நடராஜர் சிவகாமி சஹிதம் ஆனந்த விமானத்தில் எழுந்தருளி, ஆனந்த தாண்டவம் ஆடிக் காட்டினார். தில்லை அம்பலத்து ஆருத்ரா தரிசனத்தை இங்கேயே காட்டுகிறார் சிவபெருமான் என ஸ்தல வரலாறு.
அது நாள் வரை தில்லையம்பதி என்ற பெயரிலிருந்த தில்லை, இறைவன் இங்கே வந்து விட்டதால் சித் - அம்பரம், சிதம்பரம் - அதாவது வெற்றிடம் எனப் பெயர் கொண்டது. (காலை 6.00 மணி முதல் 10.30 மணி வரை இங்கேயே இருந்தாராம் இறைவன் - இன்றும் 10.30 மணிக்கு மேல்தான் சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசனம் என கூறுகின்றனர்)
ஆனந்த முனிவர்க்கு ஆனந்த தாண்டவம் ஆடிக் காட்டிய சம்பவம் நிகழ்ந்த ஊர் என்பதால் ஆனந்ததாண்டவபுரம் என பெயருற்றது. தற்போது ஆனதாண்டபுரம் என அழைக்கின்றனர்.
மானக்கஞ்சாறர் எனும் சிவபக்தன் தனது மகள் புண்யவர்த்தினிக்கு திருமணம் செய்ய நிச்சயித்து, ஏயர்கோன் கலிக்காமர் என்பவரை மணமகனாக தேர்ந்தெடுத்தார். திருமண நாளன்று மாப்பிள்ளை கலிக்காமரை வரவேற்க காத்திருந்தார் மானக்கஞ்சாறர்.
இவரை சோதிக்க எண்ணிய இறைவன் ஜடாதரன் போன்ற சிவனடியார் தோற்றத்தில் அங்கு வந்தார். இரண்டு திருமண வீட்டாரும் அவரை வரவேற்று உபசரித்தனர். மணப் பெண்ணை அழைத்து ஜடாதரனுக்கு நமஸ்காரம் செய்யச் சொன்னார்கள். பெண்ணைப் பார்த்த ஜடாதரன் இவளது நீண்ட கூந்தல் நமது பஞ்சவடிக்கு ஆகும் எனக் கூறினார். உடனே உடைவாளை உருவி கூந்தலை வெட்ட முற்பட்டார் சிவபக்தனான மானக்கஞ்சாறர். (பஞ்சவடி என்றால் முடிக்கற்றையாலான பூணூல் வடம்)
ஜடாதரன் மேலும் கூறியதாவது ஐயா பெண்ணின் கூந்தலை அவளது தாய் பிடித்திருக்க, தந்தையாகிய நீ கூந்தலை வெட்டும்போது, மணப்பெண் அழாமலிருக்க வேண்டும். அப்படி வெட்டித் தந்த கூந்தலை நான் பெற்றுக் கொள்வேன் என்றார். அவர் கூறியபடியே அனைத்தும் செய்து முடித்தனர்.
கூந்தலைப் பெற்றுக் கொண்ட ஜடாதரன் மறைந்து அந்த இடத்தில் ரிஷபாரூடராக இறைவன் காட்சி தந்தார் என ஸ்தல வரலாறு. கூந்தலை பஞ்சவடிக்காக கேட்டுப் பெற்றதால் அவருக்கு பஞ்சவடீஸ்வரர் எனும் திருநாமம்.
ஸ்தல விருட்சத்தினடியில் தவம் மேற்கொண்ட பரத்வாஜ மகரிஷியின் வேண்டுகோளுக்கிணங்க, இளமையான தோற்றத்தில் கல்யாணசுந்தரியும், வயது கூடி திருமணமானவளாக பெரியநாயகியும் இறைவனாருடன் தரிசனம் தந்தனர் என்று மேலும் கூறுகிறது ஸ்தல வரலாறு.
தைப்பூச உற்சவத்தின்போது 6ம் நாள் புண்யவர்த்தினியின் கல்யாணமும், 7ம் நாள் பஞ்சவடீஸ்வரரின் திருக்கல்யாண உற்சவமும் ஐதீகமாக கொண்டாடப்படுகின்றது. ஆடியில் சண்டி ஹோமம்.
தை மாசம், பூசம், பௌர்ணமி மற்றும் வெள்ளிக்கிழமை சேர்ந்து வந்த தினத்தன்று மாவிளக்கு போட்டு பிராரத்தனை செய்தால் புத்ர பாக்யம் கிட்டும்.
கருடன் தனது தாயாருக்காக அம்ருதம் கொண்டு செல்கையில் ஒரு துளி இங்குள்ள குளத்தில் விழுந்ததாகவும் இதனால் இதில் மூழ்கி நீராடுபவர்களுக்கு வியாதி நிவாரணியாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.
தேவார வைப்புத்தலம்