உபமன்யுவிற்கும் வியாக்ரபாதருக்கும் அருளும் விதமாகப் பிரத்யட்சமான பெருமாள், அதே நிலையில் நமக்கும் சேவை சாதிக்கின்றார்.
வியாக்ரபாதர் மலர்களைப் பறித்து மாலை தொடுக்கும் பணியில் மும்முரமாக இருந்தபோது, அவரது குழந்தை உபமன்யு அழுதான். அழுத குழந்தைக்குப் பாலூட்ட திருப்பாற்கடலையே வரவழைத்ததாக ஐதீகம்.
108 திவ்ய தேசங்களுள் ஒன்று - நாங்கூர் திவ்ய தேசங்களுள் ஒன்று.
11 திவ்ய தேச ஸ்தலங்கள் தோன்றிய வரலாறு:
சிவபெருமானை யாகத்திற்கு அழைக்காமலும், யாகத்தின் அவிர் பாகத்தைத் தராமலும், அவமானப்படுத்தி தட்சன் செய்யும் யாகத்திற்கு அழைப்பின்றிப் போனாள் பார்வதி. எவ்வளவு அறிவுரைகள் கூறியும், காதில் வாங்கிக்கொள்ளாமல் செருக்குடன், யாகத்தைத் தொடர்ந்து நடத்தினான் தட்சன். யாகத்தைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்தில், யாககுண்டத்தில் குதித்து, தன் ஸ்தூல உடலை அழித்துக்கொண்டாள் பார்வதி.
நடந்தவை அனைத்தையும் அறிந்துகொண்ட சிவபெருமான் ஆவேசம்கொண்டு ருத்ர தாண்டவம் ஆடினார். உக்ர தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கையில், அவரது ஜடாமுடி தரையில் பட்டு, அதிலிருந்து ஒரு சிவன் தோன்றி, ருத்ர தாண்டவம் ஆடினார். இவ்வாறாக மூலசிவனின் ஜடாமுடி தரையில் படும்போதெல்லாம் ஒரு சிவன் தோன்றி ருத்ர தாண்டவம் ஆட, முடிவாக 11 ருத்ரமூர்த்திகள் ஆடிக்கொண்டிருந்தனர்.
11 சிவ வடிவங்கள் கோபாவேசமாக ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தால் உலகிற்கு அழிவு என கலக்கமுற்றுப் பயந்த முனிவர்கள், திருமாலைச் சரணடைந்தனர். திருமாலும் 11 வித வடிவங்களில் தோன்றி, 11 சிவ தாண்டவர்கள் முன் நின்று, அவர்களைச் சாந்தப்படுத்தினார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
சினம் தணிந்த சிவபெருமான், ஒவ்வொரு வடிவத்தையும் ஒருவருக்குள் ஒருவராகச் செலுத்தி, இறுதியில் ஒரே வடிவமாக நின்றார். தன்னைப் போலவே ஏகாதச வடிவங்கள் கொண்டு திருமாலும் எழுந்தருள வேண்டுமென சிவன் கோரியதால், இத்தலத்தில் 11 பெருமாள்களாகத் திருமால் சேவை சாதிக்கின்றார் என ஸ்தல வரலாறு.
ஸ்ரீ வண்புருஷோத்தமம், ஸ்ரீ வைகுந்த விண்ணகரம், திருத்தெற்றியம்பலம், திரு அரிமேய விண்ணகரம் ஆகிய திவ்ய தேசங்களில் மணவாள மாமுனிகள் மங்களாசாஸன உற்சவத்திற்கு எழுந்தருளுகிறார்.