பார்வதி தேவி, சிவபெருமான் தமது திருமேனியில் விஷ்ணுமூர்த்தியை சரிபாதி பொருத்திக் கொண்ட சங்கரநாராயண வடிவத்தைக் காண ஆசை கொண்டு, அந்த தரிசனம் கிடைக்க வேண்டி பூலோகம் வந்து இங்குள்ள புன்னைவனத்தில் (கரி வலம் வந்த நல்லூர்) கடுந்தவம் மேற்கொண்டார்.
அவரது தவத்தினால் மகிழ்ந்த சிவபெருமான், ஒரு ஆடி மாதத்தில் உத்ரட்டாதியும் பௌர்ணமியும் கூடிய நள்ளிரவு வேளையில் ஒரு பாதி சங்கரனாகவும் ஒரு பாதி நாராயணனாகவும் காட்சி தந்தார்.
சிவபெருமான் பெரியவரா? விஷ்ணு பெரியவரா? என்ற தர்க்கத்தில் நாகங்களுக்குள் தர்க்கம் முற்றி சண்டையாக மாறியது. வியாழ பகவானின் யோசனைப்படி, உமாதேவி தவமிருந்த இத்தலத்திற்கு வந்த நாகங்கள், இரண்டு மூர்த்திகளும் ஒன்றான வடிவம் கொண்டிருப்பதைக் கண்டதும், இருவரும் ஒருவரே என அறிந்து கொண்டு சண்டையிடுவதை நிறுத்தினர். இந்த நாகங்கள் சுனை ஒன்றை உருவாக்கி இங்கிருந்து கொண்டு இவ்விறைவனை வழிபட்டனர் என ஸ்தல வரலாறு.
முன் ஜென்மத்தில் கந்தர்வனாக இருந்த மணிக்ரீவன் என்பவன் இந்த ஜென்மத்தில் பூலோகத்தில் பிறந்து புன்னை வனத்து காவற்காரனாக இருந்தான். காவற்பறையன் என்பர். ஒரு நாள் தோட்டத்திலிருந்த மேடான பகுதியை சமன் செய்ய மண்வெட்டி கொண்டு வெட்டிய பொழுது, பாம்பின் வால் வெட்டுண்டு இருப்பதையும் அருகே சிவலிங்கம் ஒன்று இருப்பதையும் கண்டு, இந்த செய்தியை மன்னனுக்கு தெரிவிக்க ஓடோடி வந்தான்.
மன்னன் வந்து கொண்டிருந்த வழியில் அவன் ஏறி வந்த யானை, மேற்கொண்டு செல்ல மறுத்து கொம்பினால் தரையை குத்திக் கொண்டு கீழே விழுந்து புரண்டது. செய்வதறியாது பயணத்தை நிறுத்திய மன்னனிடம், காவற்பறையன் ஓடி வந்து தான் கண்டதை தெரிவித்தான்.
அறுபட்ட வாலுடன் பாம்பையும் புற்றிடங் கொண்ட சிவலிங்கத்தையும் கண்ட மன்னன், அந்த லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து கோவில் ஒன்றையும் ஸ்தாபித்தான். அந்த லிங்கமே ஸ்ரீ சங்கரலிங்க ஸ்வாமி. புற்றிலிருந்து வெளிப்பட்டதால் வன்மீகநாதர் என்பார்கள்.
சங்கரலிங்கத்தை உலகறியச் செய்த காவற்பறையனுக்கு ஊரின் தெற்கே ஒரு கோவில் உள்ளது. (காப்பறையன் தெரு) யானை தந்தத்தால் பூமியை தோண்டிய இடம் பெருங்கோட்டூர்.
பொதிகை மலைச் சாரலிலுள்ள பஞ்சபூத ஸ்தலங்களுள் நிலம் (பிருத்வி ஸ்தலம்).
ஆடித்தபசு விழா பிரசித்தமானது. பகல் 12 மணிக்கு தங்க சப்பரத்தில் கோமதி அம்மன் புறப்பட்டு தபஸ் மண்டபம் வந்து இறங்குவார். மாலை 4.15 மணிக்கு ஸ்வாமி காட்சி கொடுக்கும் பந்தலுக்கு வருகிறார். 6.15 மணிக்கு அம்பாள் ஸ்வாமி இருக்கும் பந்தலுக்கு வந்து, ஸ்வாமியை மூன்று முறை வலம் வருவார். பின்னர் மாலை மாற்றிக் கொள்ளுதல், ஊஞ்சல் உற்சவம் ஆகியன நடைபெறும்.
சங்கரனார் கோவிலின் தேர் மிகப் பெரியது. சித்திரை திருவிழாவின் 9ம் நாள் ஸ்வாமி தேரும், ஆடிதபசு திருவிழாவின் 9ம் நாள் அம்பாள் தேரும் புறப்படும்.
கோமதி அம்மனுக்கு மாவிளக்கு பிரார்த்தனை விசேஷம் என்பார்கள். செவ்வரளி மலர்களைப் பரப்பி இரட்டை தீபம் ஏற்றும் பிரார்த்தனையும் செய்கின்றனர்.
சுப்பிரமணிய பாரதியார் கோமதி அம்மனைப் போற்றி பாடியுள்ளார் என குறிப்பொன்று கூறுகிறது.