கல்லில் (மலையில்) இறைவன் குடி கொண்டுள்ளதால் இவ்வூர் கற்குடி என்றழைக்கப்படுகிறது. ராவணனின் ஒன்றுவிட்ட சகோதரனான கரன் வழிபட்ட மலை என்பதால் கரகுடி எனப் பெயர் பெற்று, பின்னர் கற்குடி ஆகியிருக்கக் கூடும் என்றும் கூறுவர்.
உயிர்களை உய்விக்கும் நாதர் என்பதால் 'உய்யக்கொண்டார்' என்றும் 'உஜ்ஜீவனநாதர்' என்றும் அழைக்கப்படுகிறார்.
புத்திரபாக்கியம் வேண்டும் என்று தவமிருந்து சிவபெருமானிடம் வேண்டிய ம்ருகண்டு முனிவருக்கு, 16 வயது வரையே ஜீவித்திருக்கும் ஞானபுத்திரனாக மார்க்கண்டேயனைத் தந்தார் சிவபெருமான். 14 வயது வந்ததும் பிள்ளையைச் சீக்கிரத்தில் இழந்துவிட விரும்பாத முனிவரின் கவலையைப் போக்க பல சிவஸ்தலங்களுக்குச் சென்று வழிபட்டான் மார்க்கண்டேயன்.
இத்தலம் வந்து வழிபட்டதும் அவனுக்கு, உமையவளுடன் காட்சி தந்தார் இறைவன். யமனிடமிருந்து அவனைக் காப்பாற்றுவதாக வாக்களித்தார். மார்க்கண்டேயனது ஆயுளை உய்வித்தவர் என்பதனால் 'உய்யக்கொண்டார்' என்ற பெயரைக் கொண்டார்.
பெருமானின் சந்நிதி மேற்கு நோக்கி இருப்பினும், யமனுக்குரிய திசை தெற்கு என்பதால், அவனுடைய வழியில் சென்று அவனை வரவிடாமல் தடுத்து நிறுத்த முற்பட்டதால், பெருமானின் திருவடிச் சுவடுகள் தெற்குச் சுற்றில் கொடிமரத்தருகே காணப்படுகின்றன.
யமபயம் இல்லாதிருக்கும் பொருட்டு, தெற்கே கொடிமரமும், மழு முதலிய படைகளும் வைக்கப்பட்டுள்ளன. உயிருக்கு ஆபத்து என்ற நிலையில் உள்ளவர்கள், இவ்விறைவனைப் பிரார்த்தித்து, பானக நைவேத்தியம் செய்து, கொடிமரத்தருகே வைத்து விநியோகம் செய்கின்றனர்.
அஞ்சனாட்சியின் கையிலுள்ள மலர் உடைந்து பின்னமடைந்திருந்ததால், புதிய சிலை ஒன்றைச் செய்து 'பாலாம்பிகை' எனப் பெயரிட்டுப் பிரதிஷ்டை செய்தனர். ஆனால் அஞ்சனாட்சியோ, ஊர் பெரியவர்களின் கனவில் தோன்றி, தாம் இங்கேயே இருக்க விரும்புவதாகத் தெரிவித்தாளாம். அதனால் இங்கு இரண்டு அம்பாள் சிலைகள் உள்ளன.
ராஜராஜ சோழனின் தமக்கை குந்தவை நாச்சியார் இத்தலத்தில் தொடர்ந்து அன்னதானம் செய்து வந்ததாகக் குறிப்பொன்று கூறுகிறது. அன்றாடப் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு பெற வேண்டி, பக்தர்கள் அன்னதானம் செய்வதைத் தொடர்கின்றனர்.
தேவாரத்திருத்தலம்.