சோழ மன்னன் ஒருவன், ஆயிரம் பேருக்கு அன்னமளிப்பதாக சங்கல்பம் செய்து கொண்டு, சிவாலய மண்டபம் ஒன்றில், ஆயிரம் இலைகளைப் போட்டு விருந்து பரிமாறினான். அன்னம் சாப்பிட வந்த அடியவர்களுள் ஆயிரம் பேருக்கு ஒருவர் கம்மியாக 999 பேர்களே இருந்தனர். நேரம் போய்க் கொண்டிருக்க, கவலையுற்ற மன்னன், "இன்னுமொரு அடியாரை அனுப்பி என் சங்கல்பத்தைப் பூர்த்தி செய்ய அருளுங்கள் ஸ்வாமி" என இறைவனிடம் வேண்டினான்.
நெற்றி நிறைய திருநீறு பளிச்சிட, உருத்ராட்சம் அணிந்து வயதான சிவனடியார் ஒருவர் மன்னனின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையில், இலையில் அமர்ந்தார். அனைவரும் விருந்துண்ட பிறகு, ஆயிரத்தில் ஒருவராக வந்த வயோதிகரை அணுகிய மன்னன், "கடைசியாக வந்து அன்னதானப் பலனை அடைய உதவியதற்கு நன்றி. தங்களின் ஊர் எது?" என்று கேட்க, "யாருக்கு ஊர்?" எனத் திருப்பிக் கேட்டாராம் பெரியவர். 'யாருக்கு ஊர்' என்பதே மருவி 'ஆக்கூர்' என்றானதாகக் கூறுகின்றனர்.
'யாருக்கு ஊர்' எனக் கேட்ட பெரியவர் ஓடிப் போய் புற்றுக்குள் மறைந்தாராம். புற்றைக் கிளறிப் பார்த்ததில் சிவலிங்க தரிசனம் கிடைத்ததாம். கடப்பாறை கொண்டு புற்றைக் கிளறிய அடையாளம், லிங்கத்தின் மீது இன்றளவும் தரிசிக்கலாம். குழப்பத்திலிருந்த மன்னனுக்கு சந்திரசேகரராகக் காட்சி தந்து, ஆயிரத்தில் ஒருவனாக வந்து விருந்துண்டது தாமே என்று தெரிவித்ததாக ஸ்தல வரலாறு.
வயோதிக வடிவில் வந்தவராயிருப்பினும், இளமை ததும்பும் சிலை வடிவமாகவே தரிசனம் தருகின்றார்.
அன்னமும், நீரும், மலரும் சுமந்து அனுதினமும் சிவத்தொண்டாற்றிய சிறப்புலி நாயனாருக்கு, கார்த்திகை மாத பூராட நட்சத்திர நாளில் சிறப்பு வழிபாடு நடத்துகின்றனர். இறைவன் அவரை ஆட்கொண்ட தினமும் அதுவே. மார்கழி திருவாதிரை நாளைக் கொண்டாடுகின்றனர்.
தேவாரத் திருத்தலம்.