அத்ரி முனிவர் வீட்டில் இல்லாத சமயத்தில் அவரது வீட்டிற்கு வந்த மும்மூர்த்திகள், அவரது மனைவியான அநுசுயா தேவியின் கற்பை பரிசோதிக்க எண்ணி, நிர்வாணமாக வந்து தங்களுக்கு உணவு பரிமாற வேண்டும் எனக் கூறினார்கள். தனது பதிவிரதா சக்தியினால், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளை குழந்தைகளாக்கி, சோறூட்டி, தொட்டிலிலிட்டு தாலாட்டி தூங்க செய்து விட்டாள் அநுசுயா தேவி. நாரதர் மூலமாக விஷயமறிந்த சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய மூன்று தேவியர்களும் அநுசுயாவின் ஆஸ்ரமம் வந்து, தத்தம் கணவன்மார்களுக்கு சுயரூபம் தர வேண்டி நின்றனர். அவர்களது வேண்டுகோளுக்கிணங்க அநுசுயாவும் மும்மூர்த்திகளை சுயரூபம் அடையச் செய்தாள் என்பது புராண வரலாறு.
அநுசுயாவின் வேண்டுகோளுக்கிணங்க தாணு (சிவன்), மால் (விஷ்ணு), அயன் (பிரம்மா) (தாணுமாலயன்) ஆகிய மும்மூர்த்திகளும் இங்கே கோவில் கொண்டதாக ஸ்தல வரலாறு.
அகலிகையை கள்ளத்தனமாக புணர்ந்ததால், உடல் முழுவதும் கண்கள் பெற சாபம் கொண்ட இந்திரன் இந்த சாபத்தைப் போக்கிக் கொள்ள இங்கு கடுந்தவம் மேற்கொண்டு இறைவனருளால் சாபம் நீங்கப் பெற்றான். இதனால் தினமும் அர்த்தஜாம பூஜையை இங்கு இந்திரனே நடத்துவதாக ஐதீகம். இதன் பொருட்டு இங்கு அர்த்த ஜாம பூஜை இல்லை. மாலை வேளைகளில் பூஜை செய்யும் அர்ச்சகர் மறுநாள் காலையில் நடையை திறக்க மாட்டார். வேறொருவர் திறந்தாலும் அகம் கண்டதை புறம் கூற மாட்டேன் என்று சங்கல்பம் செய்து கொண்டு பூஜையை ஆரம்பிப்பார். அப்படியொரு சம்பிரதாயம் இங்கு நிலவுகிறது.
இவ்வாலயத்தில் தாமிர பாத்திரம் ஒன்றில் கொதிக்கும் நெய் வைத்திருப்பார்களாம். குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் அதற்குள் கைவிரல்களை மூன்று முறை விடவேண்டும். மூன்று தினங்கள் கழித்து கைவிரல்கள் பாதிப்பு அடையவில்லை என்றால் அவன் நிரபராதி எனக் கருதுவார்களாம். கைமுக்கு எனும் இந்த விசித்திர பழக்கத்தை மகாராஜா ஸ்வாதித் திருநாள் நிறுத்தி வைத்தாராம்.
சுசீ என்றால் தூய்மை அடைதல் எனப் பொருள். இந்திரன் தூய்மை அடைந்ததால் சுசீந்திரம் எனப் பெயர் கொண்டதாகக் கூறுவர். இங்குள்ள மூர்த்தியே கன்னியாகுமரி அம்மனை மணக்கவிருந்ததாகவும், விவாகம் தடைப்பட்டு விட்டதாகவும் ஸ்தல வரலாறு தெரிவிக்கின்றது.