பஞ்சபூதங்களில் மகாபூதமாக இருப்பது ஆகாயம். மற்ற நான்கு பூதங்களின் பிறப்பிடமும் இதுவே. பூமியில் ஆகாயத் தலமாக இருப்பது சிதம்பரம். சித் என்றால் ஞானம் - அம்பரம் என்றால் பெருவெளி. ஞானப்பெருவெளியான சிதம்பரம் தரிசிக்க முக்தி தரும் க்ஷேத்திரம். பூலோக கயிலாயம் என்றே கூறுவர். சிற்சபையினைச் சுற்றி அமைந்துள்ள திருமாளிகையின் இரண்டாம் அடுக்கில் ஆகாசலிங்கத்தைத் தரிசிக்கலாம்.
ஆதியில் தில்லை மரங்கள் மிகுந்து வளர்ந்திருந்த பகுதியாக இருந்ததால் இவ்வூருக்கு தில்லை என்ற பெயர் வந்தது. வியாக்ரபாதர் எனும் புலிக்கால் முனிவர் வழிபட்டதால் பெரும்பற்றபுலியூர் எனப் பெயர் பெற்றது. இதுவே வடமொழியில் வியாக்ரபுரம் எனப்பட்டது. இதன் காரணமாக ஐந்து புலியூர்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
ஆடவல்லானின் நடனத்தைப் பார்த்ததால் கிடைக்கும் மகிழ்ச்சியை, திருமால் மூலமாகக் கேள்விப்பட்ட ஆதிசேஷன், தானும் அந்த நடனத்தைக் காண வேண்டுமென, கயிலையிலும் இத்தலத்திலும் அமர்ந்து கடுந்தவம் புரியலானார். ஆதிசேஷனே தங்களுக்கு மகனாகப் பிறக்க வேண்டுமென வேண்டி தவமிருந்தனர் அத்ரி-அனுசுயா தம்பதியினர். இந்த இரண்டு தவங்களின் பயனாக ஆதிசேஷன் பாம்பாகப் பிறந்து, அனுசுயாவின் பாதங்களில் விழுந்தார்.
பாதங்களில் அஞ்சலி செய்வதாக விழுந்ததால் பதஞ்சலி எனப் பெயர் கொண்டு வளர்ந்து வந்தார்.
காசியில் உள்ள மத்யந்த முனிவரின் மகனாகப் பிறந்த மாத்யந்தன் மலர்களைப் பறித்து சிவபூஜை செய்து வந்தான். பொழுது விடிந்துவிட்டால் மலர்களின் தேனைப் பருக வரும் வண்டுகள், மலர்களை எச்சில் செய்து விடுவதால், அதை சிவபூஜைக்குப் பயன்படுத்த விரும்பாத மாத்யந்தன், சிவபெருமானிடம் முறையிட்டு அழுது புலம்பி, தான் பொழுது விடிவதற்குள் இருட்டில் மலர்களைப் பறிக்க உதவ வேண்டும் என வேண்டினான்.
இருட்டில் பார்க்கும் சக்தியையும், வேகமாக மரம் ஏற ஏதுவாகப் புலிக்கால்களையும் தந்து உதவினார் சிவபெருமான். அன்று முதல் மாத்யந்தன் வியாக்ரபாதன் என்று பெயர்கொண்டான். (வியாக்ர என்றால் புலி) அவனது தந்தையின் அறிவுரைப்படி காசியிலிருந்து இவ்வூருக்கு வந்து, தில்லைவனத்தில் சுயம்புவாக எழுந்தருளியுள்ள திருமூலட்டானரைத் தரிசித்து வழிபடலானான். ஆசை கொண்டு தவம் மேற்கொண்டான்.
தில்லை சிற்றம்பலத்தில் தை மாதம் வியாழக்கிழமை பூச நட்சத்திர நன்நாளில் உச்சிப் பொழுதில் சிவகாமசுந்தரி பார்த்திருக்க, வியாக்ரபாதர், பதஞ்சலி, ஜைமினி ஆகிய மூவரின் வேண்டுகோளின்படி தில்லை மூவாயிரவர் காண, நடராஜப் பெருமான் ஆனந்த தாண்டவம் ஆடிக் காட்டினார். அப்படியே ஐம்பொன் சிலையானார்.
இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் சிதம்பரத்தில் 10 நாட்கள் திருவிழா கொண்டாடுகின்றனர். இவ்விழாவில் மூன்று முனிவர்களின் உலாத் திருமேனிகளும் மூன்றாம் பிரகாரத்தில் வலம் வந்து திருமூலநாதரின் சந்நிதியை அடைகின்றன.
இரண்யவர்மன் எனும் அரசன் இவ்வாலயத்தை நிர்மாணித்ததாகக் கூறுவர். கங்கைக் கரையிலிருந்து மூவாயிரம் தீட்சிதர்களைக் கூட்டிவந்து தில்லையில் குடி வைத்தான் புலியூர் அரசன். எண்ணிக்கையில் ஒன்று குறைந்தது. மறைந்த ஒருவர் சபாநாயகரே என அசரீரி ஒலித்தது எனக் கூறப்படுகின்றது.
திருநாளைப்போவார் எனப்படும் நந்தனார், இறைவனோடு கலந்த ஸ்தலம். உருவமாக நடராஜரும், அருவுருவமாக ஸ்படிக லிங்கமும், அருவமாக சிதம்பர ரகசியமும் - ஆக மூன்று நிலைகளில் தரிசனம் தரும் ஸ்தலம்.
தேவாரத் திருத்தலம் - பஞ்ச பூத ஸ்தலங்களுள் ஒன்று (ஆகாயம்) - பஞ்ச சபைகளுள் ஒன்று (கனகசபை) - ஐந்து புலியூர்களில் ஒன்று (பெரும்பற்றபுலியூர்)