சிவபெருமானைக் குறித்து தவம் செய்த முண்டன் எனும் அரக்கன், வரங்கள் பல பெற்று, அனைவரையும் இம்சித்து கொடுமைப் படுத்தி வந்தான். சிவனாரின் கட்டளைப்படி வடுக பைரவர் தோன்றி அவனை சம்ஹாரம் செய்தார்.
முண்டனைக் கொன்ற தோஷம் நீங்க, பைரவ மூர்த்தி இங்கு சிவலிங்கம் ஒன்றை அமைத்து வழிபட்டார்.
வடுகன் வழிபட்டதால் இவ்விறைவன் வடுகீஸ்வரர் என்கிற வடுகநாதர் என அழைக்கப்பட்டார். இவ்வுரும் வடுகூர் எனப் பெயர் கொண்டது. வடு என்றால் பிரம்மச்சாரி அல்லது இளைஞன் என்று பொருள். குமார பருவத்தில் இருப்பதால் பைரவர் வடுகர் எனப்படுகின்றார்.
அஷ்டபுஜ துர்க்கை, அர்தநாரீஸ்வரர், பிரதோஷ நாயகர், இடது புறமாக திரும்பி காட்சி தரும் மயில் வாகனத்துடன் சுப்ரமண்யர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
விநாயகர் - மூத்தப்பிள்ளை, முருகன் - இளையபிள்ளை, சம்பந்தர் - ஆளுடையப்பிள்ளை, சண்டிகேஸ்வரர் - சேஞ்சலூர்பிள்ளை என சைவ நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அது போல் பைரவருக்கு ஆண்டபிள்ளை என்று உள்ளது. ஆண்டபிள்ளை வழிபட்ட ஸ்தலமாதலால், ஆண்டார்கோயில் என்று அழைக்கப்படுகின்றது.
முதலாம் பராந்தக சோழன் காலத்து ஆலயம்.
தேவாரத்திருத்தலம்.