'மாணி' என்றால் பிரம்மச்சாரி. மாணியாக அவதாரமெடுத்து, வாமன வடிவில் மகாபலியிடம் மூன்றடி மண் கேட்டு வந்த திருமால், மூன்றடி பெற்றபின், சிவபக்தனான பலி சக்ரவர்த்தியை பாதாளத்தில் அழுத்தி, சிரஞ்சீவியாக இருக்கச் செய்துவிட்டு, அந்த தோஷம் விலக இங்கு லிங்கம் ஒன்றை ஸ்தாபித்து ஏகாந்த பூஜை செய்தார். இதற்கு இடையூறு ஏதும் இல்லாதிருக்க, பீமருத்ரரை காவலாக எழுந்தருளும்படி செய்ததாக ஸ்தல வரலாறு கூறுகிறது. மாணி வழிபட்ட ஸ்தலம் என்பதால் 'மாணிக்குழி' என்றானது.
ஊழிப்பிரளயம் முடிந்து, அடுத்த சிருஷ்டி தொடங்க, இறைவனும் இறைவியும் ஒன்று சேர்ந்த அருள் வடிவம் இருக்கும் ஸ்தலம் இது.
நிறைய எண்ணெய் இருந்தும், ஜ்வாலை அணையும் நிலையிலிருந்த ஒரு விளக்கின் எண்ணெயைக் குடிக்க வந்தது ஓர் எலி. அதற்கே தெரியாமல் திரியைத் தூண்டிவிட்டது. இதனால் விளக்கு மிக பிரகாசமாக எரிந்தது. இந்த புண்ணியத்தின் பயனாக, எலி அதன் மறு பிறவியில் அரசனாகப் பிறந்து, இவ்வாலயத்தைக் கட்டித் தந்ததாக ஸ்தல வரலாறு கூறுகிறது.
இது ஒரு தேவாரத்திருத்தலம்.