அனைவரையும் துன்புறுத்திக் கொண்டிருந்த அசுரர்களை சம்ஹாரம் செய்யும் பொருட்டு, இளம் பெண் ரூபத்தில் வந்த துர்க்கையை, துர்க்கை என அறியாது மோகம் கொண்டனர் அசுரர்கள். தன்னிடமிருந்து ஒரு மகா சக்தியை தோற்றுவித்தாள் துர்க்கை. அப்படி தோன்றியவளே வனதுர்க்கை. அந்த மகா சக்தியான வனதுர்க்கை காட்டிலுள்ள அசுரர்களை சம்ஹாரம் செய்தாள்.
விந்தியன் என்ற அசுரனை அழிக்க வேண்டி கோரிய அகஸ்தியருக்கு, காட்டில் வந்து அருள் பாலித்ததால் வனதுர்க்கை எனப் பெயர் கொண்டாள்.
அசுரவதம் முடித்து சிவமல்லிகா எனும் இவ்வூரில் தங்கி தவமிருந்தாள். அந்த சிவமல்லிகா எனும் கிராமமே தற்போது கதிராமங்கலம் எனப்படுகின்றது.
திதியின் புதல்வனான வித்துவன்மாலி என்பவன் கடுந்தவம் மேற்கொண்டான். பிரத்யட்சமான சூரியனைப் போல செயல்பட வேண்டும் என வரம் கோரிப் பெற்றான். இரண்டு சூரியர்கள் மாறி மாறி வலம் வந்ததால், இரவு நேரம் இல்லாது போயிற்று. இதனால் கோபமுற்ற சூரியன், வித்துவன் - மாலியுடன் போர் புரிந்து அவனை கீழே தள்ளினான். இதனால் சிவபெருமானின் கோபத்திற்கு உள்ளானான் சூரியன்.
திருத்துருத்தி ஆலயத்து தாமரை தடாகத்தில் நீராடி அனுதினமும் சிவபூஜை செய்து வந்தான் சூரியன். சிவபெருமானை நோக்கி கதிரவன் தவம் செய்த இடம் என்பதால் கதிராமங்கலம் எனப்படுகின்றது.
வனதுர்க்கையின் பக்தரான கம்பரின் வீட்டுக் கூரை பெருமழையினால் சேதமுற்றது. வனதுர்க்காவிடம் முறையிட்டு விட்டு தூங்கப் போய்விட்டார் கம்பர். காலையில் எழுந்து பார்த்தால், நெற்கதிர்களால் கூரை வேயப்பட்டிருந்தது.
கதிர் வேய்ந்த நாயகி உறையும் இடம் என்பதால் கதிராமங்கலம் ஆனதோ?