பிரம்மாவின் அருளால் ஆகாயத்தில் பறக்கும் தேர் ஒன்றினைப் பெற்று, அதனுள் அமர்ந்து பறந்து வந்து கொண்டிருந்த ஊர்த்துவரதன் எனும் அரசன் பொதிய மலையை நோக்கி பயணித்தான். திடீரென தேர் பறக்காமல் கீழே இறங்கலாயிற்று. கீழே இறங்கிய தேர் இங்குள்ள திருக்குளத்தில் அழுந்தியதால் இவ்வூர் தேரழுந்தூர் எனப் பெயர் கொண்டதாக வரலாறு தெரிவிக்கின்றது.
பிரஹஸ்பதியின் சீடனான உபரிசரவஸு எனும் அரசன் தேவதிராஜனை வழிபடாது தேரை வேகமாக செலுத்தியதால், கருடனால் அழுத்தப்பட்டு பூமியில் இறங்கி, திருக்குளத்தில் தேர் அழுந்தப்பட்டதாகவும் உபரிசரவஸுவின் தேர் அழுந்தியதால் இவ்வூர் தேரழுந்தூர் என்றானதாகவும், ஆமருவியப்பன் கோவில் வரலாற்றின் மூலம் அறிய முடிகின்றது.
உமையவளை நடுவராகக் கொண்டு, சிவபெருமானும், திருமாலும் சொக்கட்டான் ஆடினார்கள். இறுதியில் திருமாலிடம் தோற்றுப் போன சிவபெருமானை கேலி செய்து நகைத்தாள் உமையவள் என்றும், இதனால் கோபமுற்ற சிவபெருமான் உமையவளை பசுவாக மாறும்படி சபித்ததாகவும் ஸ்தல வரலாறு கூறுகின்றது. இதற்கு ஆதாரமாக இங்குள்ள சொக்கட்டான் மண்டபத்தை காட்டுகின்றனர்.
மனைவியை பிரிந்த சிவபெருமான் வேதியர் வேடம் பூண்டு, இத்தலத்து மரத்தின் கீழ் அமர்ந்து, வேதம் ஓதி வந்தார். அத்யாபகர் என்றால் வேதம் உரைப்பவர் எனப் பொருள். சிவபெருமானே ஆசிரியராக இருந்து வேதம் பயிற்றுவித்ததால் அத்யாபகர் என்றும் வேதபுரீச்வரர் என்றும் பெயர்கள் கொண்டார். இது தவிர இத்தலத்தில் வேதங்களே வந்து வழிபாடு செய்துள்ளன. வேதங்களால் தொழப்பட்டதாலும் வேதபுரீச்வரர் என்பர்.
உமையவளை பசுவாக மாறும்படி சபித்தது தேரழுந்தூரில்தான். பசுவாக மாறிய சகோதரிக்கு துணை நின்ற கண்ணன் அவளைக் காப்பாற்றும் பொருட்டு பசுக்கூட்டங்களை விரும்பி மேய்ப்பதற்காக இங்கு ஆமருவியப்பனாக இருந்தார். ஆமருவியப்பனுக்கு செய்யப்படும் அஷ்டோத்திரத்தில் கோ ரூப பார்வதி சம்ரட்சண கிருத்வாய நமஹ என்ற நாமாவளி இதை ஊர்ஜிதப்படுத்துகிறது.
கும்பமுனி அகஸ்தியர் கொடுத்த சாபத்தை, காவிரித்தாய் போக்கிக் கொண்ட ஸ்தலம் தேரழுந்தூர். இது போன்ற பல நிகழ்வுகள் - ஆமருவியப்பன் கோவிலுக்கும், வேதபுரீச்வரர் கோவிலுக்கும் பொதுவானதாக உள்ளது. ஒரே ஸ்தல புராணக் கதையால் இணைக்கப்பட்ட சிவன் - பெருமாள் கோவில்கள் எதிரெதிரே அமைந்திருப்பதும் சைவ-வைணவ ஒற்றுமைக்கு சான்றாக இருக்கின்றன.
தேரழுந்தூரைச் சுற்றியுள்ள இடங்கள் கிருஷ்ணாரண்யம் எனப்படும். கிருஷ்ணனுடைய பால்ய லீலைகள் நடந்த இடம் என்பர். ஊருக்கு வடக்கே மஞ்சளாறும் அதற்கும் வடக்கே காவிரி ஆறும் ஓடுகின்றன. தெற்கே அரை மைல் தூரத்தில் கடலாழி எனப்படும் மஹிமாலை ஆறு ஓடுகின்றது. திருமங்கை ஆழ்வாரும், திருஞானசம்பந்தரும் இந்த கிராமத்தின் அழகை வர்ணித்துள்ளனர்.
தேரழுந்தூர் வேதம் தழைத்தோங்கிய ஊராக ஆதி காலத்தில் இருந்ததாம். ஹோமப்புகை எங்கும் பரவ ஹோமங்கள் நடந்து கொண்டே இருந்த ஊர். யாகங்கள் ஆரம்பிக்கும் முன்னரே, வானமானது மழையை பொழிவிக்கும் சிறப்பான ஊர் என்ற பெயர் இருந்திருக்கின்றது.
காவிரித்தாய், மார்க்கண்டேயர், அகஸ்தியர் ஆகியோர் இத்தலத்தில் விமோசனம் பெற்றுள்ளனர்.
அழகிய பெண்ணாக, தம்மைத்தாமே அம்பிகை ஆவிர்பவித்துக் கொண்ட ஸ்தலம். இதனால்தான் சௌந்தரநாயகியாக காட்சி தருகின்றாள் என்பார்கள்.
ராமாயணம் எழுதிய கம்பர் பெருமான் பிறந்த ஊர். முதலாம் கரிகால சோழனின் தலைநகரமாக விளங்கிய ஊர். மூன்றாம் கரிகால சோழனின் தாய்மாமன் இரும்பிடர்த்தலையன் இவ்வூரைச் சேர்ந்தவர் என்பர்.
தேவாரத்திருத்தலம்.