அருள்மிகு தியாகராஜ ஸ்வாமி திருக்கோவில் (திருவாரூர்)

God Name : மூலவர்: வன்மீக நாதர், விடங்கர்: வீதி விடங்கர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

கரூர்

Call : +91-

இந்திராதி தேவர்கள் ஒருங்கே கூடி நடத்திய மிகப் பெரும் யாகத்தை நடத்தி எஜமானனாக செயல்பட்ட விஷ்ணு செருக்குற்று, தேவர்களை அடக்கி ஆளலாம் என எண்ணினார். இத்தலமருகே வந்ததும் அவரது வலிமை ஒடுங்கியது. வில்லைத் தரையில் ஊன்றி அதன் மீது தலை சாய்த்து அயர்ந்து தூங்கி விட்டார். பிரஹஸ்பதியின் யோசனைப்படி தேவர்கள் கறையான் வடிவம் கொண்டு பூமியைக் குடைந்து கொண்டு சென்று, பெரிய புற்றை உருவாக்கி வில்லின் நாணை அறுத்து விட்டனர். வில் நிமிர, விஷ்ணுவின் தலை தெறித்தது. பாதாளத்திலிருந்து பரமன் புற்றிடங்கொண்டு, சிவலிங்கமாக காட்சி தந்தார் என ஸ்தல வரலாறு. இதனால் இறைவனுக்கு புற்றிடங்கொண்டார், வன்மீகநாதர் என்றெல்லாம் திருநாமங்கள். அஸ்வினி தேவர்களைக் கொண்டு அறுபட்ட தலையைப் பொருத்தச் சொல்லி திருமாலை மீண்டும் எழச் செய்ததாகவும் வரலாறு. 'ஹ்ரு' என்றால் போக்குகிறது எனப் பொருள். 'ஹ்ரு' என்ற பதத்திலிருந்து தோன்றியது 'ஹரன்', அதாவது அரன். அரனை அடையும் மார்க்கம் என்ற பொருளில் 'அரனெறி' என்றாகி, திருமூலட்டானத்தையும் வன்மீகநாதரையும் குறிப்பதாக ஸ்தல புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரநெறி என்பது வேறு. வருணனிடம் வளர்ந்து வந்த திருமகள், மது-கைடப அசுரர்களை வென்ற திருமாலின் பெருமைகளை கேட்டறிந்து, அவரையே மணக்க விரும்பி, திருமூலட்டானம் எனும் இத்தலத்தை அடைந்து, தவம் மேற்கொண்டாள். பிரத்யட்சமான இறைவன் அவள் கோரிய வரத்தை தந்தருளினார். மேலும் தனது பெயரிலேயே இத்தலம் விளங்க வேண்டும் என்று கோரியதால், இத்தலம் கமலாலயம் என்று அழைக்கப்படுகின்றது. தனக்கு ஒரு அழகிய மகன் வேண்டுமென்று ஆசை கொண்ட திருமால், சிவபெருமானை வேண்டி, கடுந்தவம் மேற்கொண்டார். உனக்கு பிறக்கும் புத்திரன் விதியால் அழிவான் என சபித்து விடுகிறாள் உமையவள். அதன் பின்னர் திருமால் செய்வதறியாது திகைத்து யோசித்ததில் ஒரு எண்ணம் உருவாயிற்று. சிவபெருமான் - உமா தேவியார் - குமரன் ஆகிய மூவரையும் ஒரே ஆசனத்தில் அமர வைத்து பூஜித்தார். இதனால் மகிழ்ந்து, ஐயன் - அம்பிகை - குமரன் ரிஷபத்தின் மீது காட்சி தந்தனர். சினம் குறைந்த பார்வதி, விதியால் அழியும் மகன் நெற்றிக்கண்ணனால் மீண்டும் உயிர் பிழைப்பான் என வரமருளினாள். (அந்த மகன் மன்மதன்) சஹ-உமா-ஸ்கந்த கோலம் - இதுவே சோமாஸ்கந்தர் எனப்படுகிறது. இந்த சோமாஸ்கந்தர் திருமேனியை, திருமால் தன் நெஞ்சக் கோவிலில் நிறுவி வழிபட்டு பூஜித்து வந்தார். மூச்சுக்காற்றை உள்ளிழுத்தலும் வெளிவிடுதலும் நிகழும்போது அதற்கேற்றவாறு, பெருமானும் அசைந்து ஆடுவதே அஜபா நடனம் ஆகும். அதாவது எந்த சப்தமுமில்லாமல் மென்மையாக ஆடிக் கொண்டிருப்பது. தனது நெஞ்சத்தில் கோவில் கொண்ட சோமாஸ்கந்தரின் திருவுருவத்தை தேவசிற்பி விஸ்வகர்மாவிடம் விளக்கி, அழகிய வடிவமாக வடித்து பூஜித்து வந்தார். தேவலோகத்தில் அடுக்கடுக்காக ஏற்பட்ட பிரச்னைகளிலிருந்து விடுபடவும், அசுரர்களிடமிருந்து விடுபடவும், திருமாலின் உதவியை நாடினான் இந்திரன். தான் பூஜித்து வந்த சோமாஸ்கந்தரின் வடிவமான தியாகேசரை இந்திரனுக்கு கொடுத்தார் திருமால். தியாகேசரை தேவலோகத்தில் எழுந்தருளச் செய்து பூஜித்து வந்தான் தேவேந்திரன். பிறிதொரு சமயம் வலன் எனும் அசுரன் தேவலோகத்தின் மீது படையெடுத்தான். அவனை வெற்றி கொள்ள முடியாமல் தோற்றுப் போன இந்திரன், திருவாரூரை ஆண்ட தனது நண்பனான சோழ சக்ரவர்த்தியின் உதவியை நாடினான். குரங்கு முகம் கொண்டதால் முசுகுந்த சக்ரவர்த்தி என்ற பெயரையுடைய சோழன், மாபெரும் வீரன். போரில் வலனை தோற்கடித்து ஓடச் செய்தான். பரிசாக எது வேண்டுமானாலும் கேள், தருகிறேன் என்று முசுகுந்தனிடம் கூறிய இந்திரனிடம், தியாகேசரை தரும்படி வேண்டினான் முசுகுந்தன். தியாகேசனை பிரிய மனமில்லாத இந்திரன், இது திருமால் வழிபடும் மூர்த்தம், அவரது ஒப்புதல் இல்லாமல் தரமுடியாது எனக் கூறி திருமாலிடம் போனான். திருமாலும் சம்மதித்து விட்டார். கடைசியாக ஒரு தந்திரம் செய்ய முனைந்த இந்திரன், ஆறு தியாகேசரின் திருவுருவங்களைச் செய்து அசலான அஜபா தியாகேசனோடு வைத்து, இந்த ஏழில் உனக்கு வேண்டிய தியாகேசரை எடுத்துக்கொண்டு போ எனக் கூறினான். உண்மையான சிவபக்தனான முசுகுந்தன், அசல் தியாகராஜரின் திருவுருவத்தை அடையாளம் காட்டி, 'வா' என அழைத்தான். முசுகுந்தனின் திறமையை மெச்சிய இந்திரன் தனது தவறை உணர்ந்து, அந்த ஏழு திருவுருவங்களையும் முசுகுந்தனுக்கே தந்து விட்டான். ஏழு தியாகேசர் திருவுருவங்களுடன் பூலோகம் வந்த முசுகுந்த சக்ரவர்த்தி, விஷ்ணு பூஜித்த அஜபா தியாகராஜரை மாசி மாத ஹஸ்தத் திருநாளன்று திருவாரூரில் பிரதிஷ்டை செய்தான். மற்ற ஆறு திருவுருவங்களை மற்ற ஆறு ஊர்களில் பிரதிஷ்டை செய்தான். இந்த ஏழு ஊர்களையும் சேர்த்து சப்த விடங்க ஸ்தலங்கள் என்று கூறுவார்கள். 'விடங்க' என்றால் - கை புனையாது தோன்றியது, உளி கொண்டு செதுக்கப்படாதவை என்று பொருள். திருமகளும், நிலமகளும் வழிபட்டு வரம் பெற்றதால் திரு ஆரூர் எனப் பெயர் கொண்டது. மனு நீதி சோழன், பசுவுக்கு நீதியை வழங்க, தனது மகன் வீதி விடங்கனை தேர்காலில் கிடத்தி, தேரை அவன்மீது ஓட்டியபோது, தியாகப் பெருமானே விடை மீது தோன்றி காட்சியளித்து உயிர்ப்பித்தார் என ஸ்தல வரலாறு. ஆடகேஸ்வரத்தின் தென் பாகத்தில் ஸ்தல விருட்சமான பாதிரி மரம் இருக்கின்றது. இதனடியில் இரண்டு தந்தங்களும் இல்லாத பிள்ளையாரை தரிசிக்கலாம். விடங்க ஸ்தலங்கள் ஏழினுள் மூலாதாரமாக விளங்கும் ஸ்தலம். சக்தி பீடங்களுள் ஒன்றாகவும், பஞ்ச பூத ஸ்தலங்களுள் பிருத்வி (மண்) எனவும் போற்றப்படும் தலம். இத்தலத்தில் பிறந்தவர்கள் முக்தி அடைவார்கள். மனு நீதி சோழனுக்கு இறைவன் காட்சி தந்த ஸ்தலம். தேவாரத்திருத்தலம் - சக்தி பீடம் - சப்த விடங்க ஸ்தலங்களுள் பிரதானமானது - பஞ்ச பூத ஸ்தலங்களுள் பிருத்வி.
மூலவர்: வன்மீக நாதர், விடங்கர்: வீதி விடங்கர், அம்பாள்: அல்லியங்கோதை மற்றும் கமலாம்பாள். சிவபெருமானின் பல்வேறு அழகிய வடிவங்களை சுதைச்சிற்பங்களாக தாங்கி நிற்கும் கிழக்கு ராஜ கோபுரம் வழியே உள்ளே செல்கின்றனர். ஸ்தல விநாயகரான வீதி விடங்க விநாயகரை வழிபட்டு ஆசி பெற்று, பின்னாலுள்ள பிரம்ம நந்தியை தரிசித்துவிட்டு வலச்சுற்றை தொடங்குகின்றனர். பிரகார வலச்சுற்றை தொடங்க வேண்டிய மூன்றாம் பிரகாரத்தின் வடகிழக்கே உள்ள பெரிய மண்டபத்தை தேவாஸ்ரய மண்டபம் என்பார்கள். ஆஸ்ரயித்து என்றால் அடைக்கலமாகி எனப் பொருள். இறைவனை வழிபட தேவர்கள் கூடி இருந்த மண்டபம். தற்போது தேவாசிரிய மண்டபம் என்றும் ஆயிரங்கால் மண்டபம் என்றும் கூறப்படுகின்றது. இங்குள்ள அடியார்களை முதலில் வணங்கிவிட்டு பின்னர் இறைவனை வழிபடச் செல்வது மரபு. ஆகாச விநாயகர், பார்ப்பதீஸ்வரர், ஷண்முகர், எட்டு துர்க்கைகள் ஆகிய தெய்வங்களை தரிசிக்கலாம். மூலஸ்தானத்தில் புற்றினிடமாக வன்மீக நாதர் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளி தரிசனம் தருகின்றார். சுயம்பு லிங்க மூர்த்தம். புற்றிடங் கொண்டார் என்ற பெயரும் உண்டு. வெள்ளிக் கவசம் மற்றும் நாகாபரணம் பூண்டு காட்சி தருகின்றார். மூலஸ்தானத்தை திருமூலட்டானம் என்பர். பூங்கோயில் எனவும் அழைப்பர். பக்கத்தில் சோமகுசாம்பாள் எனும் போக சக்தி அம்மன் அர்த்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ளார். மிகப் பெரிய திருவுருவம். அழகிய திருமேனி. பிரியா விடை அம்மை என்றும் கூறுவார்கள். ஜடாமுடி, நெற்றிக்கண், நாகாபரணம், மான்-மழு ஆகிய சிவசின்னங்களைக் கொண்டு, மானுட ரூபத்தில் கூப்பிய கரங்களுடன் காட்சி தரும் நந்திகேஸ்வரர் வித்தியாசமான அழகு. தியாகராஜர் சபை: நீண்ட சதுர அமைப்புள்ள ரத்ன சிம்மாசனத்தில், நவரத்ன கற்கள் பதிக்கப்பட்ட திருவாசியின் நடுவே சோமாஸ்கந்தர் ரூபத்தில் எழுந்தருளியுள்ளார் தியாகராஜர். சிரசில் சூரியப்பிரபை - சந்திரப்பிரபை ஆகியன தரித்து, கங்கையை தாங்கி, திருமார்பில் ஸ்ரீசக்கரம் கொண்டு காட்சி தருகின்றார். இவரே உற்சவ மூர்த்தி. தியாகராஜர் முன்பாக இரண்டு வாள்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தனிப்பேழையில் மரகதலிங்கம் வைத்து பூஜிக்கின்றனர். இவரே வீதி விடங்கர். மூன்று வேளை அபிஷேகம். தியாகராஜரின் அருகே கொண்டி எனும் தேவி எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். மல்லிகை, முல்லை, செங்குவளை, செவ்வந்தி, மரிக்கொழுந்து, மருவு, வெட்டிவேர் ஆகியவற்றைக் கொண்டு அலங்காரம் செய்து இருப்பதால் பூ அம்பலம் என்பர். குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் சேர்த்த சாந்து இடுகின்றனர். செங்கழுநீர்ப்பூ சாத்துவது விசேஷம். நெய் தேன்குழல், பெரிய உளுந்து வடை, தூதுவளை, பாகற்காய் நைவேத்தியம். இவர் ஆடுவது அஜபா நடனம் - அதாவது, மூச்சுக்காற்று - உள் சென்றும், வெளி வந்து கொண்டும் இருக்கும் நிகழ்வு எப்படியோ அப்படியே ஆடும் நடனம். திருமால் சயனித்தபடி மூச்சு விடும்போது அவர் மார்பு மீதமர்ந்து ஆடிய நடனம். ஜபா என்றால் வாயால் ஒலி எழுப்பி ஜபித்தல். வாயால் ஒலி எழுப்பாமல் மனதிற்குள் தியானம் செய்வது அஜபா எனப்படும். ஒவ்வொரு சாயரட்சை பூஜையின்போதும் எல்லா சிவாலயங்களின் சாந்நித்யமும் ஒருங்கே கூடுவதாலும், அப்போது தேவேந்திரனே நேரில் வந்து அர்ச்சனை செய்வதாலும், தியாகராஜ பெருமானை மாலை வேளை அந்திக்காப்பில் தரிசிப்பது கூடுதல் விசேஷம் என்பார்கள். மாலை நேர பூஜையின்போது 18 வித இசைக் கருவிகளை வாசிப்பார்கள். பஞ்சமுக வாத்யம்: 4 அடி 8 அங்குல சுற்றளவுடனும், ஐந்து முகங்களுடனும் இருக்கும். நடுவே பெரிய முகமும், ஒன்று பாம்பு சுற்றியது போலவும், ஒன்று ஸ்வஸ்திக், ஒன்று தாமரைப்பூ, அடையாளமில்லாமல் ஒன்று என ஐந்து முகங்கள். மேலே மான் தோலால் கட்டப்பட்டு இருக்கும். இதில் அஜபா நடனத்தின் ஸ்ருதி பொருத்தப்பட்டுள்ளது. பாரி நயனம் எனும் நாதஸ்வரம் வாசிப்பது இத்தலத்தின் சிறப்பு. மூலவர், உற்சவர் என இரண்டு சண்டீசர்கள் உள்ளனர். மூலவரான யம சண்டேசர் முகத்தினை முழங்காலில் புதைத்தபடி ஒரு கையில் கதை ஏந்தியபடி அமர்ந்துள்ளார். இங்கு யமதர்மராஜனே சண்டேசர் பொறுப்பில் இருப்பதாக ஐதீகம். உற்சவ சண்டேசர் உற்சவங்களை நடத்தி வைப்பவர். வலச்சுற்றில் அன்னபூரணி, வாதாபி கணபதி, பஞ்சமுக ஹேரம்ப விநாயகர், விஸ்வநாதர், பஞ்ச பூத லிங்கங்கள், சஹஸ்ர லிங்கம், பிட்சாடனர், மஹாலட்சுமி, ருண விமோசன லிங்கம், தருணேந்து கேசரி அம்மை உடனாய சந்திரசேகரர், கால பைரவர், எரிசினக் கொற்றவை எனும் ரௌத்ர துர்க்கை, ரிஷபாரூடர் ஆகிய திருவுருவங்களை தரிசிக்கலாம். ஆடகேச்வரம்: ஆடகேச்சரம் எனும் ஆலயம் கோவிலுக்குள்ளேயே தென்கீழ் திசையிலே இருக்கிறது. இதற்குள் எழுந்தருளியுள்ள ஆடகேச்வரரை தரிசித்தவர்கள் எல்லாம் ஸ்வர்க்கத்தை அடைந்தமையால், அங்கு இடமில்லாமல் போவதையுணர்ந்த இந்திரன், பிலத்தை கல்லினால் மூடி விட்டான். நாகபிலம் என்பர். இதை வைப்புத்தலம் என்பர். தனிக்கோவிலில் அல்லியங்கோதை எனப்படும் நீலோத்பலாம்பிகை அம்பாள் எழுந்தருளியுள்ளார். வலது கரத்தில் கருங்குவளை மலரை ஏந்தியுள்ளார். அனுகிரகிக்கும் கோலத்தில் காட்சி தருகிறாள். பக்கத்தில் தோழி ஒருத்தி முருகனை தூக்கிக் கொண்டு நிற்கின்றாள். குழந்தைப் பேற்றை நல்குபவள். அம்பிகையின் உற்சவ திருமேனி மனோன்மணி மிகவும் அழகாக இருக்கின்றது. பார்ப்பதீச்வரம்: மூன்றாம் பிரகாரத்தில் கமலாம்பிகை கோவில் கொண்டுள்ளார். அனிந்திதை மற்றும் கமலினி ஆகிய துவாரபாலகிகள் காவலுக்கு உள்ளனர். வெளிப்புறத்தில் சங்கநிதி - பதுமநிதி காணலாம். கலைமகள் - மலைமகள் - அலைமகள் ஆகிய மூன்று தேவியரின் சக்திகளை கொண்டவள் கமலாம்பிகை. யோகாசனத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் சிவ - சக்தி ஐக்ய ஸ்வரூபிணியாக தரிசனம் தருகின்றாள். பராசக்தி பீடம், ஞான பீடம், கமலை பீடம் எனப் போற்றப்படுகின்றது. இதையடுத்து அட்சரபீடம் தரிசிக்கலாம். தாமரை போன்று செதுக்கப்பட்ட பீடமும் திருவாசியும். அதில் 16 கிரந்த மொழிகளும், 36 உயிர்மெய் எழுத்துக்களும் சேர்ந்து 51 அட்சரங்கள் காணப்படுகின்றன. பார்ப்பதீச்வரத்திற்கு அருகே ஓட்டுத் தியாகர் கோவில் கொண்டுள்ளார். சுந்தரருக்கு காட்சி தந்தவர். பிரகார வலச்சுற்றில் சங்கரநாராயணி, ராஜராஜேஸ்வரி, சரஸ்வதி, மஹாவிஷ்ணு, வள்ளி - தெய்வயானை உடனாய முருகப் பெருமான் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். ஏகாதச ருத்ரர்கள் வழிபட்ட லிங்கங்களும், தேவேந்திரன், துளசி மகாராஜா ஆகியோர் வழிபட்ட லிங்கங்களும் காணலாம். வன்மீக நாதருக்கும், வீதி விடங்கருக்கும் இடையில் ஐங்கலக்காசு விநாயகர் எழுந்தருளியுள்ளார். 120 பட்டணபடி பொற்காசுகளைக் கொண்டு உருவானவர் எனக் குறிப்பொன்று தெரிவிக்கின்றது. அசலேஸ்வரம்: மூலவராக அசலேசுவரரும் அம்பாள் வண்டார் குழலியும் எழுந்தருளியுள்ளனர். இங்குள்ள நடராஜர் விசேஷமானவர். நமிநந்தியடிகள் என்ற நாயனார் சமணர்களின் கொடுமையால் விளக்கிட எண்ணெய் கிடைக்காமல், தேவதீர்த்த நீரை விட்டு விளக்கு எரிக்கும் தொண்டினை செய்து வந்த ஸ்தலம். நீண்ட தவமிருந்த அரசனொருவன், தான் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கத் திருமேனியில் எழுந்தருள வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தான். இறைவன் சலியாது எழுந்தருளியதால் அசலேசம் எனும் பெயரைக் கொண்டது. ஆனந்தேஸ்வரம்: மங்கணன் எனும் முனிவரால் ஸ்தாபிக்கப்பட்ட மூர்த்தம் ஆனந்தேஸ்வரர். முனிவர் ஆகம முறைப்படி வழிபாடு செய்து சித்தியும் அடைந்தார். அவ்வானந்தம் தாங்க முடியாமல் கூத்தாடினார். இதனால் லிங்கத்திற்கு ஆனந்தேஸ்வரர் என்ற பெயர் வந்தது. இது ஒரு வைப்புத் தலம் என்பர். விஸ்வகர்மேஸ்வரம்: அழகிய கொடுங்கைகளும், சிற்பங்களும், தெய்வீக திருவுருவங்களும், வேதங்கள் ஸ்தாபித்து வழிபட்ட லிங்கங்களும் நிறைந்த தலம். சித்தீஸ்வரம்: பஞ்சாட்சர ஜபம் செய்து சித்தி பெற்று சித்தீசன் என்ற பெயரோடு அரசாண்டு வந்த அரசனொருவன் புத்ர பாக்யம் வேண்டி, லிங்கம் ஒன்றை ஸ்தாபித்து வழிபட்டு கோரிய வரத்தைப் பெற்றான். இதனால் இறைவன் சித்தீஸ்வரர் என்ற பெயரைக் கொண்டார். மண்டபம் ஒன்றில் வல்லபை கணபதியையும் கொடிக்கம்பமருகே பொற்கம்ப விநாயகரையும் தரிசிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.