அருள்மிகு பிரளயம் காத்தப் பெருமாள் திருக்கோவில் (அ) ஏரி காத்த ராமர் கோவில், மதுராந்தகம்
God Name : ஸ்ரீ கோதண்டராமர்
காஞ்சிபுரம்
Call : +91-
ஸ்தல வரலாறு: ஏரி காத்த ராமர் கோவில் என்றே பிரபலம். ஆதியில், மகிழ மரங்கள் மிகுந்து காணப்பட்டதால் வகுளாரண்யம் எனப் பெயரற்றது. உத்தமச் சோழன் என்னும் மதுராந்தகச் சோழனால் வேதமோதும் அந்தணர்களுக்கு தானமாக வழங்கப்பட்ட ஊர் என்பதால் சோழனின் பெயரைக் கொண்டே மதுராந்தகம் என அழைக்கப்படலாயிற்று. மதுராந்தகம் ஏரி உடையாமல் காத்ததால் இவர் ஏரி காத்த ராமர் எனப் போற்றப்படுகிறார். பிரம்ம வைவர்த்தம், பார்க்கவம் ஆகிய புராண நூல்களில் இத்தலத்தின் பெருமைகள் கூறப்பட்டுள்ளது. சுகபிரம்மம், விபாண்டகர் ஆகியோர் தவம் மேற்கொண்ட ஸ்தலம். சீதையைத் தேடிக் கொண்டு வந்த ராமனிடம், தன்னுடைய ஆஸ்ரமத்திற்கு வருமாறு அழைத்தார் விபாண்டகர். பிறிதொரு சமயம் வருவதாக வாக்களித்திருந்தார் ராமர். ராவணனிடமிருந்து சீதையை மீட்டுத் திரும்புகையில், விபாண்டக மகரிஷிக்கு கொடுத்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், இத்தலத்திற்கு சீதாப்பிராட்டியுடன் வருகை தந்தார் என ஸ்தல வரலாறு. மதுராந்தகத்திலுள்ள பெரிய ஏரி ஒன்று, ஆண்டுதோறும் மழைக் காலத்தில் கரையை உடைத்துக் கொண்டு, ஊருக்கு சேதம் விளைவிப்பது வழக்கமான ஒன்றாகும். கிழக்கு இந்தியக் கம்பெனியார் ஆட்சியில் கலெக்டராக இருந்த லயனஸ் பிளேஸ் என்ற வெள்ளைக்கார துரை 1795ஆம் வருஷம் ஏரிக்கரையை பலமாக கட்டி மேம்படுத்தினார். ஆனால் மழை வெள்ளம் அதை சேதப்படுத்தி ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. மீண்டும் பணம் செலவழித்துக் கட்டினார், மறுபடியும் கரை உடைந்தது. பஜனை கோஷ்டியை சேர்ந்த பக்தர் ஒருவர், ஜனகவல்லித் தாயார் சந்நிதியை புதுப்பிக்க வேண்டி, நிதியுதவி கேட்டு பிளேஸ் துரையை அணுகினார். "உங்கள் தெய்வங்களால் ஊர் ஏரியைக் கூட காப்பாற்ற முடியவில்லையே, பின் ஏன் அதற்கு வீண் செலவு?" என கண்டித்து அனுப்பிவிட்டார் துரை. அடுத்து பெய்த பெருமழையால் ஏரி எந்த நேரமும் உடைபடலாம் என்றிருந்த நிலையில், கலவரத்துடன் துரை, ஏரியை பார்வையிட சென்றார். திடீரென்று தோன்றிய மின்னல் வெளிச்சத்தில், வில்லும் கையுமாக இரண்டு திவ்யஸ்வரூப மூர்த்திகள் ஏரிக்கரையில் நிற்பதையும், ஏரி உடையாமல் காக்கப்பட்டிருப்பதையும் கண்டு, பிளேஸ் துரை திகைத்து போனார். ஸ்ரீராமரின் அநுக்ரஹத்தை நேரில் கண்டறிந்த பிளேஸ் துரை, சர்க்கார் செலவிலேயே தாயார் சந்நிதி கட்டிக் கொடுத்தார். பிளேஸ் துரையின் உருவமும், சந்நிதி கட்டிய சாஸனமும் கோவிலில் உள்ளது. காஞ்சியிலிருந்த ராமாநுஜர் பெரிய நம்பிகளிடம் திருமந்திர உபதேசம் பெறுவதற்காக ஸ்ரீரங்கம் பயணித்துக் கொண்டிருக்கையில், வழியில் இங்குள்ள ராமரை சேவிக்க இவ்வாலயத்திற்கு எழுந்தருளினார். இங்கு பெரியநம்பிகள் இருப்பதைக் கண்டதும், அவரது திருவடிகளை வணங்கி, தமக்கு மந்திரோபதேசம் செய்யும்படி வேண்டினார். இவரது மந்திரோபதேச வேட்கையைக் கண்டு, இவ்வாலயத்து பிரகாரத்தில், வகுள மரத்தின் கீழ் அவருக்கு, பெரிய நம்பி பஞ்ச சம்ஸ்காரங்களையும் போதித்தார். இதனால் இத்தலம் த்வயம் விளைந்த க்ஷேத்ரம் எனப்படுகிறது. தாம் திரும்பி வருவதை பரதனுக்கு தெரிவிக்கும்படி ஹனுமனை அனுப்பி விட்டதால் இத்தலத்தில் ஸ்ரீ ராமர் சந்நிதியில் ஹனுமன் இல்லை எனக் கூறப்படுகின்றது.
த்வயம் விளைந்த க்ஷேத்ரம் என்றும் அபிமான ஸ்தலமாகவும் போற்றப்படுகிறது. மூலஸ்தானத்தில் ஸ்ரீ கோதண்டராமர் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டும், கையில் வில்லுடனும் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். ஸ்ரீ தேவி - பூதேவி சஹிதம் கருணாகரப் பெருமாள் உற்சவராக சேவை சாதிக்கின்றார். வலது புறத்தில் ஜனகவல்லித் தாயார் சந்நிதி உள்ளது. தாயார் மிகுந்த வரப்ரசாதி என்பர். உற்சவ மூர்த்திகளுள் ஸ்ரீ ராமர் விக்ரஹம் அஸ்திர பிரயோக பாவத் திருமேனியாக இல்லாமல் அனுக்ரஹ மூர்த்தியாக இருப்பது விசேஷம். சீதா தேவி மற்றும் லட்சுமணன் விக்ரஹங்கள் அழகாக இருக்கின்றன. திருவாபரண அலங்காரம், வைரமுடி சேவை, முத்துக் கொண்டை போன்று ஐந்து வித அலங்காரங்கள்கொண்ட ராமரை இத்தலத்தில் சேவிக்கலாம். ஸ்ரீ ராமாநுஜர் வெள்ளுடை தரித்து கிருஹஸ்தராய் காட்சிதருவது இத்தலத்தில்தான் என்பர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.